பெரம்பலூர்,பிப்.27: பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் திட்டத்தில் 500 விவசாயிகளுக்கு மானியம் மற்றும் இடு பொருளாக ரூ.1.50கோடி மதிப்பிலான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளதாக வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பாபு தெரிவித்துள்ளார். பெரம்பலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட, நொச்சியம், அரணாரை, துறைமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களின் செயல்பாடு மற்றும் பயன்பாடு குறித்து, பெரம்பலூர் மாவட்ட வேளாண்மைத்துறை இணை இயக்குநர் பாபு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
நொச்சியம் கிராமத்தில் ஒருங்கிணைந்த பண்ணையம் திட்டம் மூலம் விவசாயி வயலில் கறவை மாடு, தேனீபெட்டி, மண்புழு வளர்ப்புப் படுகை மற்றும் பழமரக் கன்றுகள் வழங்கப்பட்டுள்ளதை பார்வையிட்ட இணைஇயக்குநர் பாபு, இத்திட்டம் விவசாயிகளுக்கு எந்த வகையில் பயனுள்ளதாக இருக்கின்றது என்பது குறித்தும், திட்டம் முறையாக செயல்படுத்தப்பட்டுள்ளதா என்பது குறித்தும் விவசாயிடம் கேட்டறிந்தார். பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட அரணாரை கிராமத்தில் விதை கிராம வளர்ச்சித் திட்டத்தில் பயனடைந்த விவசாயியிடமும், துறை மங்கலம் பகுதியில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் அரசு மானிய உதவியுடன் உளுந்து விதை மற்றும் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளதையும் வேளாண்மை இணை இயக்குநர் பாபு பார்வையிட்டார்.
தொடர்ந்து வேளாண்மைத் துறை இணை இயக்குநர் பாபு கூறியதாவவது,
பெரம்பலூர் மாவட்டத்தில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம் திட்டத்தில் மானாவாரி மேம்பாட்டு வளர்ச்சி இனத்தில் பல்வேறு இடங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்கப்பட்டு, விவசாயிகள் பயனடைந்தள்ளனர். இத் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட கறவை மாடு, தேனீப்பெட்டி, மண்புழு வளர்ப்புப் படுகை மற்றும் பழமரக் கன்றுகள் எவ்வாறு பயன்பாட்டில் உள்ளது என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இத்திட்டம் தங்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருப்பதாகவும், விவசாயம் மட்டுமின்றி கறவை மாடு, தேனீப்பெட்டி மூலம் தேனீ வளர்ப்பு, விவசாயத்திற்கு தேவையான மண்புழு வளர்ப்புப் படுகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் ஒருங்கிணைந்த பண்ணையத்தில் வழங்கப் படுவதால், தங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 500 விவசாயிகளுக்கு ரூ.150.00 லட்சம் மதிப்பில் பங்கேற்பு மானிய தொகை மற்றும் இடுபொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
முதலமைச்சரின் மன்னுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டத்தில் பாரம்பரிய வேளாண் வளர்ச்சி இனத்தில், அங்கக முறை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ரூ.10,000 பின்னேற்பு மானியமாக வழங்கும் திட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் வழங்கப்பட்டது. தேசியவேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரமான விதை உற்பத்திக்கு மானியமாக விதைப் பண்ணை அமைக்க 49 விவசாயிகளுக்கு ரூ.1.16/-லட்சம் வழங்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தில் ரூ.341.88 லட்சம் மதிப்புள்ள வீரிய ஒட்டு ரக மக்காச்சோள விதைகள் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 5,698 மானாவாரி சாகுபடி செய்த விவசாயிகள் பயனடைந்துள்ளனர்.
உணவு மற்றும் ஊட்டச் சத்து பாதுகாப்பு இயக்கத்தின் கீழ் பயறு வகைகளில் உளுந்து விதைவிநியோகம் செய்யப்படும் திட்டத்தில் சுமார் 285 விவசாயிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பிலான 4.00 மெ.டன் உளுந்து விதைகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தில் செயல் விளக்கத்திடல் மற்றும் வீரிய ஒட்டு ரக விதை விநியோகம் செய்யும் திட்டத்தில் ரூ.26.8/- இலட்சம் மதிப்பீட்டிலான 12.8 மெ.டன் வீரிய ஒட்டு மக்காச்சோள விதை விவசாயிகளுக்கு வழங்கப் பட்டுள்ளது. உணவு மற்றும் ஊட்டச்சத்து இயக்கம் மூலம் வணிக பயிர் சாகுபடி திட்டத்தில் 320 எக்டேரில் பருத்தி சாகுபடி செய்த 386 விவசாயிகள் ரூ.21.33/- இலட்சம் இடு பொருட்கள் மற்றும் பின்னேற்பு மானியம் பெற்று பயனடைந்துள்ளனர்.
பெரம்பலூர் மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்டம் என்பதால் அரசுத் திட்டங்களை விவசாய பெருமக்கள் ஆர்வமுடன் பயன்படுத்தி வருகின்றனர். அரசுத் திட்டங்கள் தொடர்பான தகவல்கள், விண்ணப்பிக்கும் முறை குறித்த தகவல்கள் தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உள்ள வேளாண்மை அலுவலர் அலுவலகங்களையோ, மாவட்டக் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள இணை இயக்குநர் அலுவலகத்தையோ அணுகி பயன்பெறலாம். இவ்வாறு வெர் கூறினார். இந்த ஆய்வின்போது, வேளாண்மை துணை இயக்குநர் பழனிசாமி, வேளாண்மை அலுவலர்கள் தாகூர், சிவானந்தம் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
The post பெரம்பலூர் மாவட்டத்தில் 500 விவசாயிகளுக்கு ₹1.50 கோடி மானியம் appeared first on Dinakaran.