
புதுடெல்லி,
வாக்காளர் பட்டியலில் இறந்த வாக்காளர்களின் பெயர்கள் உடனுக்குடன் நீக்கப்படுவது இல்லை. அவர்களின் குடும்பத்தினர் தகவல் தெரிவிக்காத பட்சத்தில், இறந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீடிக்கும். இதை தவிர்த்து, வாக்காளர் பட்டியலின் புனிதத்தன்மையை உறுதி செய்ய இறந்த வாக்காளர்களின் விவரங்களை இந்திய பதிவாளர் ஜெனரலிடம் ஆன்லைன் மூலம் பெற இந்திய தேர்தல் கமிஷன் திட்டமிட்டுள்ளது.
இதன்மூலம், இறந்தவர்களின் விவரங்கள் பதிவாளர் ஜெனரலிடம் இருந்து உடனுக்குடன் பெறப்படும். அந்த விவரங்கள், வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகள் மூலம் நேரில் களஆய்வு செய்து உறுதி செய்யப்படும். அந்த வாக்காளர்கள் பெயர் நீக்கப்படும். எனவே, இறந்தவர்களின் குடும்பத்தினர் தகவல் தெரிவிப்பதற்காக காத்திருக்க வேண்டியது இல்லை.
இதுபோல், இறந்தவர்கள் தகவல்களை கேட்டுப்பெற வாக்காளர் பதிவு விதிமுறைகள், பிறப்பு, இறப்பு பதிவு சட்டம் ஆகியவற்றின்கீழ் தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது. மேலும், பூத் சிலிப்புகளின் வடிவமைப்பில் மாற்றம் செய்ய தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. அதன்படி, வாக்காளரின் வரிசை எண், பகுதி எண் ஆகியவை முன்பகுதியில் பிரதானமாக தெரியும்.
அதனால், வாக்காளர்கள் தங்களுக்கான வாக்குச்சாவடியை எளிதாக அடையாளம் காண முடியும். வாக்குச்சாவடி அதிகாரிகளும் வாக்காளர் பட்டியலில் வாக்காளரின் பெயரை தேட எளிதாக இருக்கும். அத்துடன், வீடு வீடாக செல்லும் வாக்குச்சாவடி மட்ட அதிகாரிகளுக்கு நிலையான புகைப்பட அடையாள அட்டை வழங்குமாறு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. அப்போதுதான், அவர்கள் மீது நம்பிக்கை ஏற்பட்டு, அவர்களுடன் வாக்காளர்கள் தகவல்களை பகிர்ந்து கொள்வார்கள் என்று தேர்தல் கமிஷன் கருதுகிறது.