
சென்னை,
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்களுக்கு வழங்கப்பட்ட காவல் பாதுகாப்பு எந்தவித முன்னறிவிப்புமின்றி விலக்கப்பட்ட நிலையில் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக அரசு வழக்கறிஞருக்கு கடிதம் எழுதியிருப்பதாக ஊடகங்களில் வெளியாகியிருக்கும் செய்திகள் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன.
தூத்துக்குடி மாவட்டம், மொறப்பநாடு VAO லூர்து பிரான்சிஸ் அவர்கள் கொலையில் தொடங்கி புதுக்கோட்டையில் ஜகபர் அலி அவர்கள், திருநெல்வேலியில் ஜாஹிர் உசேன் அவர்கள் என தன்னலம் கருதாது இயற்கை வளங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் சமூக செயற்பாட்டாளர்கள் படுகொலை செய்யப்படும் நிலையில் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தன் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கடிதம் எழுதியிருப்பது தமிழகத்தில் எத்தகைய அசாதாரண சூழல் நிலவுகிறது என்பதையே வெளிப்படுத்துகிறது.
மாவட்ட ஆட்சியராக, பல்வேறு அரசுத் துறைகளின் செயலாளராக, சட்ட ஆணையராக திறம்பட பணியாற்றியதோடு பல்வேறு ஊழல்கள் மற்றும் முறைகேடுகளை துணிச்சலுடன் வெளிக்கொண்டுவந்த ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய பாதுகாப்பை தன்னிச்சையாக விலக்கியிருக்கும் திமுக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
எனவே, சகாயம் அவர்களுக்கு விலக்கப்பட்ட காவல் பாதுகாப்பை உடனடியாக வழங்குவதோடு, விளம்பர மோகத்தை சிறிதுகாலம் ஒதுக்கிவைத்துவிட்டு தமிழகத்தில் நிலவும் அசாதாரண சூழல் குறித்து சிந்தித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன். என தெரிவித்துள்ளார் .