
திருவனந்தபுரம்,
கேரளாவின் திருவனந்தபுரத்தில் விழிஞ்சம் துறைமுகத்தை அதானி நிறுவனம் பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்பின் கீழ் ரூ.8,867 கோடி செலவில் அமைத்துள்ளது. இந்த சர்வதேச துறைமுகத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கிவைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் எம்.பி சசி தரூர், கேரள முதல் மந்திரி பினராயி விஜயன் ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது:-
முதல் மந்திரி பினராயி விஜயன் இந்தியா கூட்டணியின் முக்கியமான தூண். பினராயி விஜயனும், சசி தரூரும் என்னுடன் ஒரே நிகழ்ச்சியில் பங்கேற்றதால் பலர் தூக்கத்தை இழப்பார்கள் என்றார். பிரதமர் மோடியின் பேச்சை மொழி பெயர்த்தவர் இதை சரியாக மொழிபெயர்த்து பேசவில்லை. இதையடுத்து பேசிய மோடி, இந்த தகவல் யாருக்கு போக வேண்டுமோ அவர்களுக்கு போயிருக்கும்" என்றும் குறிப்ப்ட்டார்.
மேலும் பிரதமர் மோடி பேசியதாவது: துறைமுகத்தை இப்போதுதான் பார்வையிட்டேன். கவுதம் அதானி கேரளாவில் இவ்வளவு பெரிய துறைமுகத்தைக் கட்டியுள்ளார் என்பதை ஆனால் குஜராத் மக்கள் அறிந்ததும் இதுபோன்ற துறைமுகத்தை அவர் குஜராத்தில் ஒருபோதும் கட்டியதில்லை என கோபப்படுவார்கள். எனவே அவர் குஜராத் மக்களின் கோபத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்." என்று நகைச்சுவையாகக் கூறினார்.