
புதுடெல்லி,
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சமீபத்தில் காஷ்மீருக்கு சுற்றுலா சென்றவர்கள் மிகப்பெரும் துயரத்துக்கு ஆளாகினர்.அங்குள்ள பஹல்காமில் இயற்கை அழகை ரசித்துக்கொண்டு இருந்தவர்கள் மீது பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் நடத்திய துப்பக்கிச்சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
சுற்றுலா சென்றிருந்த அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த கோழைத்தனமான தாக்குதல் நாட்டின் அனைத்து தரப்பினரையும் கொந்தளிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளும் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றன.நிராயுதபாணியாக நின்றிருந்த மக்களை கொன்று குவித்தவர்களுக்கு கடும் தண்டனை கொடுக்க வேண்டும் என்று நாடு முழுவதிலும் இருந்து மத்திய அரசை நோக்கி கோரிக்கைகள் வலுத்து வருகின்றன.
அதேநேரம் மத்திய அரசும் மேற்படி சதிகாரர்களை வேட்டையாடுவதில் உறுதியாக உள்ளது. கொடூர தாக்குதலை அரங்கேற்றியவர்கள் உலகின் எந்த மூலைக்கு சென்றாலும் விடமாட்டோம் என பிரதமர் மோடி திட்டவட்டமாக கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மீண்டும் ஒருமுறை பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதை உறுதிப்படுத்தி உள்ளார். இதனால், எந்த நேரமும் தாக்குதல் நடத்தப்படலாம் என்பதால், இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.
இந்த நிலையில், உத்தரப்பிரதேச மாநிலத்தில் கங்கா விரைவுச் சாலையில் அதிநவீன போர் விமானங்களை தரையிறக்கும் ஒத்திகையில் இந்திய விமானப்படை ஈடுபட்டிருப்பது உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷாஜகான்பூரில் உள்ள கங்கா விரைவுச்சாலையில், ரபேல், ஜாகுவார் மற்றும் மிராஜ்2000 ஆகிய அதிநவீன போர் விமானங்களை, அவசர காலங்களில் தரையிறுக்கும் ஒத்திகையில் விமானப்படையினர் ஈடுபட்டனர். பயிற்சி மூலம் இந்திய விமானப்படையின் பலத்தை வீரர்கள் நிரூபித்து வருகின்றனர். இரவு மற்றும் பகல் நேரங்களில் போர் விமானங்களை தரையிறக்கும் விதமாக, இந்தியாவில் முதல் ஓடுதளமாக கங்கா விரைவுச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் எல்லையில் இருந்து 1,000 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. போர் விமானங்களை விரைவு சாலைகளில் தரையிறக்கி ஒத்திகையில் ஈடுபட்ட சம்பவம், பாகிஸ்தானை மேலும் பதற்றமடையச் செய்துள்ளது.