தேனி: போடியில் இருந்து மதுரைக்கு கடந்த 2022 ஆம் ஆண்டு மே மாதம் முதல் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் போடியில் இருந்து சென்னைக்கு வாரத்தில் மூன்று நாட்கள் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. போடியில் இருந்து மதுரைக்கு புறப்படும் ரயிலானது தேனிக்கு வந்து தேனியில் இருந்து மாலை 6 .15 க்கு மதுரைக்கு புறப்பட்டு செல்கிறது.
இதேபோல போடியில் இருந்து தேனி, ஆண்டிபட்டி, மதுரை, திண்டுக்கல், கரூர், சேலம் காட்பாடி சந்திப்பு வழியாக சென்னைக்கு வாரத்தில் மூன்று நாட்கள் பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. போடியில் இருந்து புறப்படும் ரயிலானது தேனி நிலையத்திற்கு வந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு இரவு 8.45 மணிக்கு புறப்பட்டு சென்னைக்கு செல்கிறது. தேனியில் இருந்து மதுரைக்கு செல்லும் ரயிலிலும் தேனியில் இருந்து சென்னைக்கு செல்லும் ரயிலிலும் நூற்றுக்கணக்கான பயணிகள் சென்று வருகின்றனர்.
தேனி நகர் பெரியகுளம் சாலை ரயில்வே கேட்டில் இருந்து பிரிந்து செல்லும் குறுகிய சாலையின் வழியாக ரயில்வே நிலையம் செல்லும் சாலை உள்ளது. இச்சாலையானது கால்நடைகளால் அசுத்தங்கள் நிறைந்து காணப்படுகிறது. மேலும் இச்சாலையில் தெருநாய்களின் தொல்லையும் அதிகம் உள்ளது. மாலையில், மதுரைக்கு செல்லும் பயணிகள் சூரிய வெளிச்சத்திலேயே ரயில் நிலையத்துக்கு சென்று விடுகின்றனர். அதே சமயம் சென்னைக்கு இரவு 8.45 மணிக்கு தேனி ரயில் நிலையத்திலிருந்து ரயில் புறப்படும் என்பதால் இரவு நேரத்தில் தேனி மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து சென்னை செல்லும் பயணிகள் நடந்தும், ஆட்டோக்களிலும், டூவீலர்களிலும் ரயில் நிலையத்திற்கு வருகின்றனர்.
இச்சாலையில் மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்துள்ளது. இதனால் இரவு நேரத்தில் நாய்களின் தொல்லையில் இருந்து தப்பித்து வரும் பயணிகள் இருள் சூழ்ந்த பகுதிகளில் வழிப்பறி நடக்கும் வாய்ப்பு இருக்குமோ என்று அச்சத்திலேயே ரயில் நிலையத்திற்கு செல்லும் அவலம் உள்ளது. எனவே, ரயில்வே நிர்வாகம் பெரியகுளம் சாலையில் இருந்து ரயில் நிலையம் வரும் வரை உள்ள சாலையினை பராமரித்து மின்விளக்குகளை சீராக எரியச் செய்ய வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
The post இருளில் மூழ்கிக் கிடக்கும் தேனி ரயில்வே நிலைய சாலை: பயணிகள், பொதுமக்கள் அவதி appeared first on Dinakaran.