இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன்

3 hours ago 2

சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி சென்னை மருத்துவக்கல்லூரி மற்றும் இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் இன்று மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர்.

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு அவர்கள் ஆகியோர் இன்று (28.04.2025) சென்னை, அரசு மருத்துவக்கல்லூரி (ம) இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில், ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் செவி எலும்பு அறுவை சிகிச்சைப் பயிற்சி திறன் ஆய்வகத்தினை திறந்து வைத்து, காது, மூக்கு, தொண்டை பிரிவு முன்னாள் இயக்குநர் பேராசிரியர் முத்துக்குமார் அவர்கள் இயற்றிய செவி எலும்பு அறுவை சிகிச்சைப் பயிற்சி திறன் கையேட்டினை வெளியிட்டார்கள்.

பிறது ரூ.14 இலட்சம் செலவில் பருவ வயதினர் சிகிச்சை மையத்தினை திறந்து வைத்து, ரூ.94 இலட்சம் செலவில் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மையத்தினை திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்கள்.

பிறகு அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-

செவி எலும்பு அறுவை சிகிச்சைப் பயிற்சி திறன் ஆய்வகம் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மூன்று புதிய சிகிச்சை அமைப்புகள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையை பொறுத்தவரை, இந்திய அளவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கான மருத்துவ கட்டமைப்புகளும், மருத்துவர்களின் எண்ணிக்கையும், புறநோயாளிகளின் எண்ணிக்கையும், உள்நோயளிகளின் எண்ணிக்கையும் அதிநவீன மருத்துவ உபகரணங்களும் இருந்து வருவதை நாம் அனைவரும் நன்றாக நன்கு அறிவோம்.

அந்த வகையில் இந்த மருத்துவமனையின் கட்டமைப்பை மேலும் மேம்படுத்துவதற்கு செவி அறுவை சிகிச்சைக்கு செவி எலும்பின் அமைப்பு அதன் நுணுக்கமான உட்குறியல் மற்றும் கட்டமைப்புகள் பற்றிய முழுமையான புரிதலை ஏற்படுத்தும் வகையில் தமிழ்நாட்டில் இருக்கிற அரசு மருத்துவமனைகளில் பணிப்புரிகின்ற காது, மூக்கு,தொண்டை மருத்துவர்களின் அறுவை சிகிச்சை திறனை மேம்படுத்துகின்ற வகையில் செவி எலும்பு அறுவை திறன் ஆய்வகம் TEMPORAL BONE DISSECTION SKILL LAB ஒன்று ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, இந்த செவி எலும்பு அறுவை சிகிச்சை திறன் ஆய்வகம் என்பது ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் இன்றைக்கு புதிதாக தொடங்கப்பட்டு தமிழ்நாட்டில் இருக்கின்ற பல்வேறு மருத்துவமனைகளில் தொடர்ச்சியாக இந்த மருத்துவ சேவை வழங்குதற்குரிய பயற்சி மருத்துவர்களுக்கு இங்கே வழங்கபட இருக்கிறது.

வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை மையம் தொடக்கம் தமிழ்நாட்டை பொருத்தவரை ஏற்கெனவே அரசு மருத்துவ கல்வி மருத்துவமனைகளில் காது வால் அறுவை சிகிச்சை Cochlear implant என்கின்ற காது வால் அறுவை சிகிச்சை என்று சொல்லகூடிய மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் செவி எலும்பு அறுவை சிகிச்சை ஆய்வகம் என்பது தமிழ்நாட்டில் ஒரு புதிய முயற்சி அந்த வகையில் தமிழ்நாட்டில் பணிபுரிகின்ற காது, மூக்கு, தொண்டை பிரிவு சிறப்பு மருத்துவர்களுக்கான பயிற்சிகளை வழங்குவதற்குரிய ஆய்வகம் இன்று தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது.

அதோடு மட்டுமல்லாமல் வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. இருபாலருக்கும் வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சைப் பிரிவு ரூ.14 இலட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது. சனிக்கிழமைகளில் காலை 08 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை நடைபெறும்.

பொதுமருத்துவம், குழந்தை மருத்துவம், மகப்பேறியியல் மற்றும் மகளிர் மருத்துவம், மனநல மருத்துவம், ஊட்டச்சத்து மற்றும் தோல் மருத்துவம், பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்று ஆகியவற்றினை உள்ளடக்கிய பல்துறை அணுகுமுறைகளை இந்த சேவை மையம் வழங்கும்.

மருத்துவமனைகளின் வரலாற்றில் Clean Clinic என்று சொல்லக்கூடிய வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை மற்றும் சிகிச்சை பிரிவு இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் முதன்முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இளைய சமுதாயத்தினரிடையே இருக்கின்ற மது, புகை மற்றும் போதை பழக்கங்களினால் ஏற்படும் அபாயம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையிலும், ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள், பாலியல் ரீதியாக பரவும் நோய்த் தொற்றுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடும் வகையிலும் இந்த அமைப்பு சிறப்பான வகையில் செயல்பட உள்ளது.

நீரிழிவு நோய்க்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு பிரிவு இன்னும் ஒரு கூடுதலாக CSR நிதி பங்களிப்புடன் ரூ.94 இலட்சம் செலவில் நீரிழிவு நோய்க்கான அதிநவீன வசதிகளுடன் கூடிய சிறப்பு பிரிவு இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், நோவோ நோட்ரிக்ஸ் கல்வி அறக்கட்டளை ஆகிய இரண்டு அமைப்புகள் சேர்ந்து ரூ.94 இலட்சம் செலவில் நீரிழிவு நோய்க்கான சிறப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. சமீபத்திய ICMR மதிப்பீட்டின்படி, தமிழ்நாட்டில் நீரிழிவு நோய் பாதிப்பு என்பது 10.4 சதவிகிதமாக இருந்து வருகிறது.

எனவே நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் விழிப்புணர்வு, கூடுதல் சிகிச்சைகள் வழங்கிட பல்வேறு அதிநவீன வசதிகளுடன் கூடிய உபகரணங்கள், எக்கோ (ECHO) மற்றும் டாப்ளர் இயந்திரம் (Doppler Machine), கண் மருத்துவ பரிசோதனை உபகரணங்கள் (Ophthalmology Screening equipments), திறன் பலகை போன்ற கற்பித்தல் உபகரணங்கள் (Teaching equipments like smart board), நரம்பு கடத்தலை வேகத்தை ஆய்வு செய்யும் இயந்திரம் (Nerve conduction study machine), சர்கோபீனியா மதிப்பீட்டு கருவிகள் (Sarcopenia Assessment tools), வலிமிகுந்த நீரிழிவு நரம்பியல் சிகிச்சைக்கான துடிப்புள்ள மின் காந்தப்புலம் சிகிச்சை (Pulsed Electro-Magnetic Field Therapy for treating painful diabetic neuropathy), நீரிழிவு கால் விழிப்புணர்வு மற்றும் சிகிச்சை வசதிகள் மற்றும் யோகா சிகிச்சை(Diabetic Foot awareness & treatment facilities and Yoga Therapy facilities) வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் மரு.அருண்தம்புராஜ், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் மரு.சங்குமணி, சென்னை மருத்துவக்கல்லூரி முதல்வர் சாந்தாராம், துணை முதல்வர் கவிதா, நீரிழிவு நோயியல் துறை இயக்குநர் பேராசிரியர் தர்மராஜன், காது, மூக்கு, தொண்டை நிலைய இயக்குநர் பேராசிரியர் சுரேஷ்குமார், பேராசிரியர் மரு.பாரதிமோகன் மற்றும் மருத்துவப் பேராசிரியர்கள் உடனிருந்தனர்.

The post இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.3.48 கோடி மதிப்பீட்டில் மருத்துவ உபகரணங்கள் வழங்கினார் அமைச்சர் மா.சுப்பிரமணியன் appeared first on Dinakaran.

Read Entire Article