மேலூர்: மேலூர் சுற்றுவட்டார பகுதியில் 1 மணி நேரம் பெய்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால், மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கிடாரிபட்டியில் வேரோடு மரம் சாய்ந்து தகர கொட்டகை மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. பகல் வேளையில் நடமாட மக்கள் தயங்குகின்றனர். இருப்பினும் மேலூர் பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மேலூர் சுற்றுவட்டார பகுதிகளான தெற்கு தெரு, நரசிங்கம்பட்டி, தும்பைப்பட்டி, கீழையூர், மேலவளவு, கிடாரிப்பட்டி, அழகர்கோவில் பகுதியில் பலத்த மழை பெய்தது. மாலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை ஒரு மணிநேரம் பெய்த பலத்த மழையால் சாலைகள், தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த மழைக்கு கிடாரிபட்டியில் ஆசாத் கான் என்பவரது வீட்டு முன்பு இருந்த பெரிய புளியமரம் வேரோடு சாய்ந்து தகரக் கொட்டகை மீது விழுந்தது. கொட்டகையில் யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது. காற்றுடன் பெய்த மழையால் பொதுசுக்காம்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் மின்தடை ஏற்பட்டது. நீண்ட நேரமாகியும் மின்தடை சரிசெய்யப்படாததால் ஆத்திரமடைந்த மக்கள் 30க்கும் மேற்பட்டோர் திரண்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து வந்த மேலூர் போலீசார் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலை கைவிட்டனர். இதனால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொட்டி தீர்த்த கோடை மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
The post மதுரை அருகே மேலூரில் காலையில் வறுத்தெடுத்தது வெயில் மாலையில் கொட்டித் தீர்த்தது மழை appeared first on Dinakaran.