லோன் ஆப் கும்பல் கொடூரம்;மனைவி படங்களை மார்பிங் செய்து மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை: 16 பேர் கைது

3 hours ago 3

திருமலை: லோன் ஆப் மூலம் ரூ.2 ஆயிரம் கடன் வாங்கியதால் மனைவியின் படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து மிரட்டிய கும்பலால் தொழிலாளி தற்கொலை செய்துகொண்டார். இந்த கும்பல் 9 ஆயிரம் பேரிடம் ரூ.200 கோடி மோசடி செய்தது தெரிய வந்துள்ளது. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மகாராணிபேட்டையை சேர்ந்தவர் மகேஷ் (40, பெயர் மாற்றம்), தொழிலாளி. இவர் சில மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் உடனடி கடன் செயலி மூலம் அவசர தேவைக்காக ரூ.2,000 கடன் வாங்கியுள்ளார்.

அதனை சில வாரங்களில் திருப்பி செலுத்தினார். ஆனால் கடன் கொடுத்தவர்கள், மகேஷின் செல்போனில் இருந்த தகவல்களை பயன்படுத்தி `ஹேக்’ செய்து சைபர் குற்றச்செயலில் ஈடுபட்டுள்ளனர். மேலும் செல்போனில் இருந்த மகேஷின் மனைவியின் புகைப்படங்களை எடுத்து நிர்வாணமாக மார்பிங் செய்துள்ளனர். பின்னர் அதை மகேசுக்கு அனுப்பி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் மகேசும், அவரது மனைவியும் அதிர்ச்சியடைந்தனர். ஆனாலும் பணம் தர மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் நிர்வாண புகைப்படங்களை அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு அனுப்பினர். இதனால் வேதனையடைந்த மகேஷ், ரூ.2000 கொடுத்துள்ளார்.

இதை வாங்கிக்கொண்ட ைசபர் கிரைம் குற்றவாளிகள், மேலும் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதனால் மனவேதனை அடைந்த மகேஷ் கடந்த 3 மாதங்களுக்கு முன் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரின்பேரில் மகாராணிபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்தனர். இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. முதற்கட்டமாக மகேஷின் செல்போன் மற்றும் அவரது கடன் செயலியை சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்தனர். தொழிலாளிக்கு பீகார், ராஜஸ்தான், டெல்லி, ேகரளா மற்றும் பாகிஸ்தான் நாட்டில் இருந்தும் அடிக்கடி மிரட்டல் மெசேஜ் வந்துள்ளது. மேலும் மகஷே் கொடுத்த ரூ.2000 அசாம் மற்றும் குஜராத் வங்கி கணக்குகளில் பிரித்து டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

அந்த வங்கியை தொடர்புகொண்டு போலீசார் விவரங்களை சேகரித்தனர். அதில் சம்பந்தம் இல்லாத யாரோ ஒருவரின் கணக்கில் இவர்களது பணம் செலுத்தப்பட்டு பின்னர் அதனை மோசடி கும்பல் எடுத்திருப்பதும் தெரிந்தது. இந்த கடன் செயலி மூலம் நாடு முழுவதும் 9,000 பேர் பாதிக்கப்பட்ட விவரம் தெரியவந்தது. இதுதொடர்பாக விசாகப்பட்டினம் கமிஷனர் ஷங்கர்பட்டா தலைமையில் சிறப்பு தனிப்படை குழு தீவிர விசாரணை நடத்தி 16 பேரை நேற்று ைகது செய்தனர். அவர்களிடம் இருந்து 50க்கும் மேற்பட்ட செல்போன்கள், லேப்டாப் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்யப்பட்டது.இதுதொடர்பாக விசாகப்பட்டினம் கமிஷனர் ஷங்கட்பட்டா நேற்றிரவு அளித்த பேட்டி:

முன்பின் ெதரியாதவர்களிடம் வங்கி கணக்கு தொடங்குவதற்காக கமிஷனுக்கு ஆசைப்பட்டு நமது ஆவணங்களை கொடுக்கக்கூடாது. ஆந்திர மாநிலம் ஏலூரை சேர்ந்த `சர்க்யூட் டாக்டர்கள்’ என்ற பெயரில் போலி நிறுவனம் பதிவு செய்து, அந்த நிறுவனத்தின் பெயரில் பல்வேறு வங்கிகளில் கரண்ட் அக்கவுண்ட் தொடங்கப்பட்டது. அதில் அஞ்சனா தேவி என்ற பெயரில் ஆவணங்கள் கொடுத்து பணபரிவர்த்தனை நடந்துள்ளது. இதுதொடர்பாக அந்த பெண்ணிடம் விசாரித்தபோது கமிஷனுக்கு ஆசைப்பட்டு தனது ஆவணங்களை கொடுத்தது தெரியவந்தது.

அதை பயன்படுத்தி ஏலூரை சேர்ந்த ஷாம்பா, சந்தீப், திலீப், ஜீவன்சாய், சாய் கிருஷ்ணா, ஆதர்ஷ் மற்றும் னிவாஸ் ஆகியோர் 132 வங்கி கணக்குகள் மூலம் பணபரிவர்த்தனை செய்துள்ளனர். இதுதவிர நெட்பேங்கிங் மூலமும் பாஸ்வேர்ட் பெற்று சீனாவை சேர்ந்த சைபர் கிரைம் குற்றவாளிகள் மூலமும் பணபரிவர்த்தனை நடந்துள்ளது. இதுவரை 9,000 பேரிடம் ரூ.200 கோடி மோசடி நடந்துள்ளது. இதில் தேசிய சைபர் கிரைம் போர்ட்டல் மூலம் ₹60 லட்சம் முடக்கப்பட்டுள்ளது. மொத்தம் 16 பேரை கைது செய்துள்ளோம். மேலும் விசாரித்து வருகிறோம்.இவ்வாறு கூறினார்.

The post லோன் ஆப் கும்பல் கொடூரம்;மனைவி படங்களை மார்பிங் செய்து மிரட்டியதால் தொழிலாளி தற்கொலை: 16 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article