குமாரபாளையம்: விவசாய விளைநிலத்தில், கொட்டப்பட்டு தீ வைக்கப்படும் ரசாயன கழிவுகள் விவகாரம் குறித்து விசாரணை மேற்கொண்ட வருவாய்துறையினர், இது குறித்து மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் அனுப்பினர். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம், அருவங்காடு கிராமத்தில் உள்ள விவசாய விளைநிலத்தில், கடந்த சிலநாட்களாக இரவு நேரங்களில் லாரியில் கொண்டு வரப்படும் திரவ ரசாயனங்கள் கொட்டப்பட்டு தீ வைக்கப்பட்டு வருகிறது. இந்த திரவநிலை ரசாயனம் எரிவதால் காற்று மாசடைந்து சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்படுகிறது. இரவு நேரத்தில் எழும் கரும்புகை குறித்து அப்பகுதியினர் வருவாய்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தாசில்தார் சிவக்குமார், வருவாய் ஆய்வாளர் புவனேஷ்வரி ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அங்கு கிடந்த தகர பேரல்கள், எரிந்த கழிவுகள் குறித்து புகைப்படங்களை பதிவு செய்தனர். தெலங்கானாவில் உள்ள ஒரு நிறுவனம் தங்கள் கழிவுகளை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்திற்கு அனுப்பியதற்கான கடிதம் அங்கு கிடைத்தது. இதை கைப்பற்றிய அதிகாரிகள், விளை நிலத்தில் கொட்டப்பட்டு எரிக்கப்படும் ரசாயனத்தின் தன்மை குறித்து ஆய்வு செய்யும்படி குமாரபாளையம் மாசுகட்டுப்பாட்டு வாரியத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். இரவு நேரத்தில் சட்டவிரோதமாக கொட்டப்படும் கழிவுகளால் கிராமத்தில் அமைதி கெட்டுள்ளது.
The post இரவு நேரத்தில் எரிப்பதால் புகை மூட்டம்; விளை நிலத்தில் கொட்டப்படும் தெலங்கானா ரசாயன கழிவுகள்: தாசில்தார் நேரில் ஆய்வு appeared first on Dinakaran.