சேலம்: சேலத்தில் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி, பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்ட நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.3 கோடி ரொக்கம், 300 கிராம் தங்கம், 200 கிராம் வைரம், 2.5 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது.
திருவண்ணாமலையை சேர்ந்தவர் ராஜேஷ் (35). இவர் சேலம் சொர்ணபுரி அய்யர் தெருவில், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு கட்டிடத்தை வாடகைக்கு எடுத்து ரீ கிரியேட் பியூச்சர் இந்தியா என்ற பெயரில் நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார். இவரது நிறுவனத்தில் பகுதி நேரம், முழுநேரம் வேலை செய்தால் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை சம்பளம் கிடைக்கும் என்று கவர்ச்சிகரமான அறிவிப்பு வெளியிடப்பட்டு, நிறுவனம் சார்பில் துண்டுபிரசுரம் அச்சடித்து பொதுமக்களிடம் விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து சேலம் பகுதியில் வசிக்கும் ஏராளமானோர் இந்த நிறுவனத்தில் சேருவதற்கு படையெடுத்தனர்.
இந்நிறுவனத்தில் ரூ.30 ஆயிரம், ரூ.1 லட்சம், ரூ.2 லட்சம் முதலீடு செய்தால் அந்த தொகைக்கு ஏற்ப குறிப்பிட்ட மாதத்தில் இரட்டிப்பு பணம் தருவதாகவும் அறிவிக்கப்பட்டது. இதனை நம்பிய மக்கள், ஆயிரத்துக்கும் மேற் பட்டோர் பணத்தை முதலீடு செய்தனர். இதுவரை பல கோடி பணம் முதலீடு பெறப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம், அந்த நிறுவனத்தை ராஜேஷ் காலி செய்து விட்டு செல்வதாக தகவல் பரவியது. இதனால், முதலீடு செய்த பொதுமக்கள், நிறுவனத்தை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து சென்று, நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேசை பிடித்து விசாரித்தனர். அப்போது பொதுமக்களிடம் இரட்டிப்பு பணம் தருவதாக கூறி பலகோடி பணம் முதலீடு பெறப்பட்டது தெரியவந்தது.விசாரணையில், கடந்த 2011ல் கோவையில் ஒரு நிறுவனத்தில் ராஜேஷ், கள்ளக்குறிச்சி ராஜேஷ் ஆகியோர் வேலை செய்து வந்துள்ளனர். அதேபோல் சேலத்தில் ஒருநிறுவனத்தை தொடங்கி பொதுமக்களிடம் பணம் இரட்டிப்பு தருவதாக கூறி, முதலீடு பெற்று மோசடியில் ஈடுபட்டது தெரிந்தது.
இதையடுத்து நிறுவன உரிமையாளர் ராஜேஷ், இயக்குனர்கள் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ராஜேஷ், அவரது மனைவி சத்தியாபாமா, மெய்யனூரை சேர்ந்த ஹரிபாஸ்கர் ஆகிய 4 பேர் மீது, பட்ஸ் சட்டத்தின் கீழ்(உரிமம் இல்லாமல் நிதிநிறுவனம் நடத்தியது,அங்கீகாரம் இல்லாத திட்டங்களில் முதலீடு பெற்று மோசடி) பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து, கோவை டான்பிட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர். மேலும், இவர்களிடம் இருந்து ரூ.3 கோடி ரொக்கம், 300 கிராம் தங்கம், 200 கிராம் வைரம், 2.5 கிலோ வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது. ஏற்கனவே, சேலம் அம்மாபேட்டையில் அறக்கட்டளை நடத்தி, பணம் இரட்டிப்பு தருவதாக ரூ.500 கோடி அளவுக்கு ேமாசடி செய்த விஜயாபானு உள்ளிட்ட 4 பேரை சமீபத்தில் போலீசார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* போலீசாரை தடுத்த 10 பேர் கைது
பண மோசடி செய்த நிறுவனத்தின் ஏஜென்டாக செயல்பட்ட பெண்கள் உள்பட 70 பேர், அங்குள்ள ஒரு அறையில் இருந்தனர். போலீசார் நிறுவனத்தின் உரிமையாளர் ராஜேஷை, போலீஸ் ஸ்டேஷசனுக்கு அழைத்து செல்ல முயன்றபோது, போலீஸ் வாகனம் முன்பு அந்த ஏஜென்டுகள் தடுத்து நிறுத்தி, கொலை மிரட்டல் விடுத்தனர். இதையடுத்து போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்தாகவும் 10 பேரை போலீசார் கைது செய்து, சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
The post இரட்டிப்பு பணம் தருவதாக மோசடி ரூ.3 கோடி, தங்கம், வைரம் பறிமுதல்: 4 பேர் கைது appeared first on Dinakaran.