முன்பெல்லாம் நாம் உயிர்ச்சத்துள்ள நிலத்தடி நீரை நேரடியாக பருகிவந்தோம். இப்போது ஆர்.ஓ வாட்டர் என்ற பெயரில் உயிர்ச்சத்துகள் நீக்கப்பட்ட தண்ணீரைக் குடிக்கிறோம். அதேபோல காய்கறி, பழங்கள், அரிசி ரகங்களையும் உயிர்ச்சத்து நீக்கப்பட்ட பொருட்களாக்கி உட்கொண்டு வருகிறோம். இவை எப்படி நமது உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும். இதை மாற்ற வேண்டும் என்றால் இயற்கை விவசாயம் மட்டுமே ஒரே வழி என்று அதிரடியாகப் பேசத் துவங்கினார் நடராஜன். நெல்லை மாவட்டம், பாவூர்சத்திரத்தை சேர்ந்த இவர் தலைமை ஆசிரியராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இப்போது தனக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் விவசாயம் பார்க்கிறார். ஒரு காலைப்பொழுதில் தோட்டத்தில் எலுமிச்சை அறுவடையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நடராஜனைச் சந்தித்தோம்.
“எஸ்.எஸ்.எல்.சி படித்துவிட்டு டீச்சர் ட்ரைனிங் முடித்தேன். பின்னர் புதுக்கோட்டையில் உள்ள அரசுப்பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தேன். என்னுடைய சொந்த ஊரான பாவூர்சத்திரத்திற்கு டிரான்ஸ்பர் கிடைத்து அங்கிருக்கும் அரசுப்பள்ளியில் பணியைத் தொடர்ந்தேன். ஆசிரியராக பணியைத் தொடங்கி தலைமை ஆசிரியராக ஓய்வு பெற்றேன். பள்ளி வேலை நேரம் போக மீதி நேரத்தில் விவசாயத்தில் ஈடுபடுவேன். 80களின் காலகட்டத்தில் தரிசு நிலமாக இருந்த என்னுடைய நிலத்தை 90களில் விளைநிலமாக மாற்ற முடிவு செய்தேன். அப்போதே இயற்கை விவசாயம்தான் என்னுடைய நோக்கமாக இருந்தது.
முதலில் எலுமிச்சை சாகுபடி செய்ய முடிவெடுத்தேன். ஆனால் காய்ந்த நிலத்தை ஈரப்பதத்துடன் வைப்பதற்காக கற்பூரவல்லி, செவ்வாழை போன்றவற்றை நட்டேன். இதற்கான கன்றுகளைக் கூட இயற்கை விவசாயிகளிடம் இருந்து வாங்கினேன். அடுத்த மூன்று வருடங்களில் அறுவடையும் செய்தேன். நான் எதிர்பார்த்த அளவிற்கு மகசூல் கிடைக்கவில்லை என்றாலும், மற்ற பயிர்களை நடவுசெய்ய ஏற்றதாக எனது நிலம் மாறிவிட்டது. இதற்கிடையில் கோயில் விசேஷத்தில் அலங்காரத்திற்காக பயன்படுத்தப்படும் எலுமிச்சை மாலையை எடுத்து வந்து சேகரித்து வைப்பேன். இந்த விதைகளை எடுத்து பதியம் போட முடிவு செய்தேன். அதன்படி விதைகளை மண்சட்டியில் வைத்து ஒரு அடி வரை வளர்த்து அதை நிலத்தில் நடவு செய்தேன்.
இதற்கு முன்பு நிலத்தில் மூன்று முறை உழவு ஓட்டினேன். நிலத்திற்கு உரமாக மாட்டு எரு, ஆட்டு எரு, வேப்பம் புண்ணாக்கு மட்டுமே பயன்படுத்தினேன். இதற்கு 5 டிராக்டர் எரு தேவைப்பட்டது. ஒரு அடி வளர்ந்த செடிகளை நிலத்தில் ஊன்றுவதற்கு முன்பு ஒரு அடி அளவில் குழி எடுத்து அதில் மாட்டு எரு, ஆட்டு எரு, சூடோமோனஸ் விரிடி உள்ளிட்டவற்றைக் கலந்து அரை அடி அளவுக்கு நிரப்பினேன். பின்னர் அதில் எலுமிச்சைக் கன்றுகளை நடவு செய்தேன். மூன்று நாட்களுக்கு பிறகு உயிர்த்தண்ணீர் கொடுத்தேன்.
தொடர்ந்து 15 நாட்கள் கழித்து நிலத்தில் முளைத்த களைகளை அகற்றினோம். செடிகளைச் சுற்றி சிறிய மண்வெட்டியைக் கொண்டு கொத்தி விடுவேன். இவ்வாறு செய்வதன் மூலம் செடிகள் நன்கு வேர் பிடித்து வளரத்தொடங்கும். மூன்று மாதம் கழித்து மீண்டும் ஒரு முறை களை எடுத்து செடிகளுக்கு ஒரு கை உரம் இடுவோம். அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பது போல, என்னதான் இயற்கை உரமாக இருந்தாலும் தேவையான அளவு மட்டுமே செடிகளுக்கு கொடுக்க வேண்டும். அதை கவனத்தில் கொண்டுதான் செடிகளுக்கு உரம் இடுவேன். நேரடியாக வெயில் படுவதால் செடிகள் கருகிவிடும். இதனைக் கட்டுபடுத்த பனை ஓலையை நிழலுக்காக ஒவ்வொரு செடிக்கும் கட்டி விடுவேன். மழைக்காலத்தில் செடிகளை பச்சை வண்ணப் புழுக்கள் அதிகம் தாக்கும். இந்தப் புழுக்களைக் கட்டுபடுத்த எந்தவொரு மருந்தையும் பயன்படுத்துவதில்லை. நேரடியாக நானே ஒவ்வொரு செடியாக பார்த்து அதில் இருக்கும் புழுக்களை எடுத்து கீழே போட்டு நசுக்கிவிடுவேன். இவ்வாறு சரியான வகையில் தண்ணீர் விட்டு செடிகளைப் பராமரித்து வந்தால் எலுமிச்சைச் செடிகள் நான்காவது வருடத்தில் பூக்கத் தொடங்கிவிடும்.
பூக்கும் பூக்கள் அத்தனையும் காய்க்காது. மிளகு அளவில் காய்கள் வந்ததும் கொஞ்சம் கொட்டிவிடும். வேப்பங்கொட்டை அளவில் இருக்கும்போது சில காய்கள் கொட்டிவிடும். இது போக மீதி இருக்கும் காய்கள் மட்டுமே பழமாக வரும். அந்த வகையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் எலுமிச்சையில் இருந்து எனக்கு மூன்று ஏக்கருக்கும் சேர்த்து 2165 கிலோ எலுமிச்சைப்பழங்கள் மகசூலாக கிடைத்தன. ஒரு கிலோ பழம் ரூ.35 முதல் ரூ.220 வரை விற்பனையாகும். சராசரியாக ஒரு கிலோ பழம் ரூ.65க்கு விற்பனையாகும். அந்த வகையில் கடந்த மாத அறுவடை மூலம் எனக்கு ரூ.1,42,025 வருமானமாக கிடைத்தது. இதில் செலவுத்தொகை 30 சதவீதம் போக ரூ.99 ஆயிரம் லாபமாக கிடைத்தது’’ என்று புன்னகையுடன் கூறி முடித்தார்.
தொடர்புக்கு:
நடராஜன்: 98650 07858.
The post இயற்கையால் பெருகிய எலுமிச்சை விளைச்சல்…ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரின் சாகுபடி அனுபவங்கள்! appeared first on Dinakaran.