
சென்னை,
தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னை பனையூரில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, த.வெ.க. பொதுக்கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய் பேசியது குறித்து தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது;-
"த.வெ.க. தலைவர் விஜய் சாலிகிராமத்தில் சின்ன பையனாக எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருந்தார். பின்னர் சாலிகிராமத்தில் இருந்து பனையூருக்கு வந்துள்ளார். வாழ்க்கை விரிவடையும்போது விஜய்க்கு சாலிகிராமத்தில் இருந்து பனையூர் வர வேண்டிய தேவை ஏற்படுகிறது.
அதே போன்றுதான் விமான நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகரிக்கும்போது, மீனம்பாக்கத்தில் இருந்து பரந்தூர் தேவைப்படுகிறது. பரந்தூரை மாநில அரசுதான் தேர்வு செய்து கொடுத்தது. வளர்ச்சிக்கு ஆதரவாக பேசினால் விவசாயிகளுக்கு எதிராக பேசுகிறோம் என்று அர்த்தம் இல்லை.
பரந்தூரே வேண்டாம் என்று பனையூரில் இருந்து கொண்டு சொன்னால் எப்படி? த.வெ.க.- தி.மு.க. என்று பேசுவது எதுகை மோனைக்கு சரியாக இருக்கலாம், ஆனால் எதிரில் நீங்கள் இல்லை. சினிமாவில் கால்ஷீட் கொடுப்பதுபோல் அரசியலுக்கு விஜய் கால்ஷீட் கொடுத்து வருகிறார்.
பிரதமர் மோடி குறித்து 'தமிழ்நாட்டின் மீது உங்களுக்கு அக்கறை இல்லையா ஜி?' என்று விஜய் கேட்கிறார். இது மிகவும் தவறு. கொரோனா காலகட்டத்தில் தமிழ்நாடு உள்பட அனைவரையும் காப்பாற்றியவர் பிரதமர் மோடி. விஜய் ஜி, இப்படி பேசுவது தவறு ஜி."
இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.