
கன்னியாகுமரி,
கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி நாகர்கோவில் அருகே உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருக்கு கடந்த வாரம் திடீரென வயிற்றுவலி ஏற்பட்டது.
உடனே அவர் சிகிச்சைக்காக தன்னுடைய தாயார் மூலம் ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அந்த மாணவியின் வயிற்றில் பாதிப்பை கண்டறிய ஸ்கேன் செய்து பார்த்தபோது அவர் 2 மாதம் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இதனை அறிந்த மாணவி மற்றும் அவருடைய தாயார் அதிர்ச்சி அடைந்தனர். இதுதொடர்பாக மாணவியின் தாயார் மகளிடம் விசாரித்த போது களியல் பகுதியை சேர்ந்த அஜய் (வயது 20) என்ற வாலிபருக்கும், தனக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டதாகவும், இந்த பழக்கத்தை பயன்படுத்தி திற்பரப்பில் உள்ள ஒரு விடுதிக்கு அழைத்துச் சென்று அஜய் தன்னை பலாத்காரம் செய்ததையும் தெரிவித்துள்ளார்.
உடனே இதுகுறித்து மாணவியின் தாயார் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் அஜய் மீது போலீசார் போக்சோ பிரிவில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.