
சென்னை,
சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம், செங்கல்பட்டு, வேளச்சேரி, கும்மிடிப்பூண்டி, திருத்தணி உள்ளிட்ட வழித்தடங்களில் நாள்தோறும் 700 ரெயில்களுக்கு மேல் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில் புறநகர் ரெயிலில் ஏ.சி பெட்டிகளை இணைக்க உள்ளதாக கடந்த வருடம் தெற்கு ரெயில்வே அறிவித்திருந்தது. இந்த பணிகள் நடப்பு ஆண்டில் இம்மாதம் (ஏப்ரல்) முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதன்படி சென்னையில் ஏப்ரல் முதல் வாரத்தில் ஏசி ரெயில் சேவை தொடங்க திட்டமிடப்பட்டிருந்த நிலையில், பாம்பன் பாலம் திறப்பு விழாவோடு சேர்த்து இதைத் தொடங்கலாம் என திட்டமிருந்ததாக கூறப்பட்டது. ஆனால் மீண்டும் தேதி தள்ளிப் போனது. இதனால் பயணிகள் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் தமிழ்நாட்டின் முதல் குளிர்சாதன புறநகர் ரெயில் சேவை இன்று முதல் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு இடையே 14 பெட்டிகள் கொண்ட ரெயிலாக இயக்க தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.