சென்னை,
சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் இன்று முதல் 80 புதிய BS-VI சாதாரண பஸ்கள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த பஸ்கள் 'விடியல் பயணத் திட்டத்தின்கீழ்' இயக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு முதல்-அமைச்சரின் உத்தரவின்படி, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு 2022-23 மற்றும் 2023-24 ஆம் வருடத்திற்கான அறிவிப்பின்படி 2,000 புதிய பஸ்களில் இதுவரை 1,905 புதிய பஸ்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளன. அதேபோல் அடிச்சட்டம் நல்ல நிலையில் உள்ள 1,500 பஸ்களில் கூண்டு முழுவதும் புதுப்பிக்க ஆணை வழங்கப்பட்டு, அதில் 1,262 பஸ்கள் புதுப்பிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்துள்ளன.
மேலும், மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் ஜெர்மன் வளர்ச்சி வங்கி (KFW) நிதி உதவியுடன் ஏற்கனவே மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்கள் பயன் பெறும் வகையில் இயக்கப்பட்டு வரும் 228 தாழ்தள பஸ்களுடன், கூடுதலாக 41 புதிய தாழ்தள பஸ்களும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
2024-25 ஆம் வருடத்திற்கான அறிவிப்பின்படி 3,000 புதிய பஸ்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் ஏற்கனவே மற்ற போக்குவரத்து கழகங்களில் 162 பஸ்துகள் இயக்கப்பட்டுள்ள நிலையில், இன்று முதல் மாநகர் போக்குவரத்துக் கழகத்தில் 80 புதிய சாதாரண BS-VI பஸ்களையும் சேர்த்து 242 புதிய பஸ்கள் மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்கண்ட BS-VI சாதாரண பஸ்கள் "விடியல் பயணத் திட்டத்தில்" இயக்கப்படுவதால் மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் உள்ளிட்டோர்கள் பயன் பெறுவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.