இன்று சவுபாக்கிய கவுரி விரதம்: நிறைவான வாழ்வு அமைய அம்பாளை வழிபடுங்கள்..!

1 day ago 3

திருமணமான பெண்கள் நிறைவான வாழ்வுடன் கூடிய சவுபாக்கியத்தை பெறுவதற்காகவும், தங்கள் கணவரின் ஆரோக்கியத்திற்காகவும் நீண்ட ஆயுளுக்காகவும் சவுபாக்கிய கவுரி விரதம் இருப்பது வழக்கம். பங்குனி மாத வளர்பிறை திருதியை தினம் சவுபாக்கிய கவுரி விரத நாள் ஆகும். அவ்வகையில், இன்று (31.3.2025) இந்த சிறப்பான விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.

அம்பாளை கொண்டாடுகின்ற இந்த விரதத்தை மிக எளிமையான பூஜையின் மூலம் கொண்டாடலாம். சிலர் ஒரு மாத காலம் கொண்டாடுவார்கள். அடுத்து வரும் திருதியை முதல் அட்சய திருதியை வரை கலசத்தை ஆவாகனம் செய்து தினந்தோறும் அம்பாளை பூஜை செய்வதன் மூலமாக பற்பல சவுபாக்கியங்கள் பெறலாம் என்பது நம்பிக்கை.

வீட்டில் பூஜை செய்ய முடியாதவர்கள் பெருமாள் கோவிலில் தாயாருக்கும், சிவாலயத்தில் அம்பாளுக்கும் விளக்கு போட்டு அர்ச்சனை செய்து வரலாம். கவுரி விரத நாளில் அன்னையை சவுபாக்ய சுந்தரி என்னும் திருநாமத்தால் சிவபெருமானுடன் இணைந்த திருக்கோலத்தில் வழிபடுவது சிறப்பு.

வீட்டில் பூஜை செய்யும் முறை

வீட்டில் பூஜையை காலை அல்லது மாலை வேளையில் செய்யலாம். பூஜை அறையில் விளக்கேற்றி வைத்து சிவனாருடன் தேவி இணைந்த கோலத்தில் அம்பிகையின் உருவ படத்தை மலர் மாலை சூட்டி சிவப்பு வஸ்திரத்தால் அலங்கரிக்க வேண்டும். மங்கல பொருட்களான மஞ்சள், குங்குமம், சந்தனம், காதோலை, கருகமணி, மர சீப்பு, கண்மை, மஞ்சள் கயிறு, மெட்டி, கொலுசு, வளையல்கள், மருதாணி, தாம்பூலம் (வெற்றிலை, பாக்கு), புடவை, ரவிக்கை துண்டு ஆகியவை தயாராக வைத்து கொள்ள வேண்டும்.

பூக்கள், பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள் ஆகியவையும் தயாராக வைத்துக் கொள்ள வேண்டும். முதலில் கணபதியை பூஜிக்க வேண்டும். பின்னர் நவகிரகங்களை வணங்க வேண்டும். பின்னர் சிவன் பார்வதியை பூக்களால் அர்ச்சித்து வழிபட வேண்டும். தூப, தீப, கற்பூர ஆரத்தியுடன், தயாராக உள்ள பழங்கள், பலகாரங்கள், நிவேதனப் பொருட்கள், மங்கள பொருட்கள் அனைத்தையும் பக்தியுடன் அர்ப்பணம் செய்ய வேண்டும். பின்னர் யாரேனும் இருவருக்கு உணவளித்து, பெண்களுக்கு தட்சணையுடன் தாம்பூலம் அளிக்க வேண்டும்.

Read Entire Article