இன்று கூடுகிறது தமிழக சட்டசபை: டங்ஸ்டன் சுரங்க உரிமத்துக்கு எதிராக தனித்தீர்மானம்

1 month ago 5

சென்னை,

தமிழக சட்டசபையில் துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் கடந்த ஜூன் 20 முதல் 29-ம் தேதி வரை 10 நாட்கள் நடத்தப்பட்டது. பேரவை விதிகளின்படி, ஒரு கூட்டம் முடிந்தால், அடுத்த 6 மாதங்களில் அடுத்த கூட்டம் நடத்த வேண்டும். அந்த வகையில், இம்மாத இறுதிக்குள் சட்டசபை கூட்டம் நடத்தப்பட வேண்டும்.

இந்நிலையில், தமிழக சட்டசபை இன்று கூடும் என்று பேரவை தலைவர் அப்பாவு கடந்த நவம்பர் 25-ம் தேதி அறிவித்திருந்தார். கடந்த 2-ம் தேதி நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில், சட்டசபை கூட்டத்தை டிசம்பர் 9, 10-ம் தேதிகள் (இன்றும், நாளையும்) என 2 நாட்கள் நடத்துவது என முடிவெடுத்து அறிவிக்கப்பட்டது.

இதன்படி இன்று காலை 9.30 மணிக்கு சட்டசபை கூடுகிறது. கூட்டம் தொடங்கியதும் மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்படுகிறது.தொடர்ந்து, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், மேற்கு வங்காள முன்னாள் முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யா, முன்னாள் ராணுவ தலைமை தளபதி எஸ்.பத்மநாபன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ஈ.சி.ஐ. திருச்சபையின் பேராயர் எஸ்றா சற்குணம், பிரபல தொழில் அதிபர் ரத்தன் டாடா, தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் பி.சங்கர், முரசொலி நாளிதழின் நிர்வாக ஆசிரியர் முரசொலி செல்வம் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் கொண்டுவரப்படுகிறது.

அதன் பின்னர், கேள்வி நேரம் தொடங்குகிறது. ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள்.

தொடர்ந்து, 2024-2025-ம் ஆண்டில் ஏற்பட்ட கூடுதல் செலவுக்காக துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது.

பின்னர், அரசினர் தனித் தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட இருக்கிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்திடவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும் மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

நாளை காலை 9.30 மணிக்கு கேள்வி நேரத்துடன் கூட்டம் தொடங்குகிறது. கேள்வி நேரம் முடிந்ததும், 2024-2025-ம் ஆண்டு துணை பட்ஜெட் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தில் உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பதில் அளிக்க இருக்கிறார். தொடர்ந்து, கூடுதல் நிதி ஒதுக்குவதற்கான சட்ட மசோதா நிறைவேற்றப்பட இருக்கிறது. அத்துடன் இந்த ஆண்டுக்கான சட்டசபை கூட்டம் நிறைவடைகிறது.

இதனிடையே சென்னை பல்லாவரத்தில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக சட்டசபையில் எதிர்க்கட்சிகள் பிரச்சினையை கிளப்பும் என்று கூறப்படுகிறது. 

Read Entire Article