
மும்பை,
லாத்தூர் மாவட்டம் ஹடோல்டி கிராமத்தை சேர்ந்தவர் அம்பாதாஸ் பவார்(வயது75). நிதி நெருக்கடி காரணமாக தனது விவசாய நிலத்தில் மனைவியுடன் சேர்ந்து கடந்த 7, 8 ஆண்டுகளாக மனித கலப்பையாக மாறி உழைத்து வருகிறார். சமீபத்தில் அம்பாதாஸ் பவார் தனது மனைவியுடன் நிலத்தில் தோளில் கலப்பையை பூட்டிக்கொண்டு உழும் வீடியோ வைரலானது. இதற்கு சில நெட்டிசன்கள் எதிர்மறையான கருத்துக்களை பதிவிட்டாலும் பலரும் அவரின் மன உறுதியை பாராட்டினர். விவசாயிகள் பலரும் நிதி நெருக்கடி மற்றும் பல்வேறு காரணங்களால் தற்கொலை செய்துகொள்ளும் நிலையில் 75 வயதிலும் தளராமல் உழைக்கும் அம்பாதாஸ் பவாரின் மன உறுதியை அவர்கள் பாராட்டினர்.
இந்தநிலையில் லாத்தூர் மாவட்ட கிரந்திகாரி ஷேத்காரி சங்கதானாவினர் நேற்று அவருக்கு ஒரு ஜோடி காளையை பரிசாக வழங்கினர், அவர்கள் மேளதாளங்களுடன் நடனமாடி கொண்டே ஹடோல்டி கிராமத்தில் உள்ள விவசாயியின் வீட்டிற்கு காளைகளை கொண்டு வந்தனர்.
மேலும், தெலுங்கானாவை சேர்ந்த ஒரு தொண்டு நிறுவனம் அம்பாதாஸ் பவாரை சந்தித்து நிதி உதவியாக ரூ.1 லட்சத்திற்கான காசோலையை வழங்கியது. மராட்டிய கூட்டுறவு மந்திரி பாபாசாகேப் பாட்டீலும் விவசாயியின் கடன்களை முழுவதுமாக அடைக்க உதவுவதாக உறுதியளித்துள்ளார்.