
புதுடெல்லி,
மராட்டிய மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை மற்றும் சோயாபீன் விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை செலுத்தாதது தொடர்பாக, மராட்டிய சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 2 முறை வெளிநடப்பு செய்தனர். இந்த நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி வெளியிட்ட எக்ஸ் வலைத்தள பதிவில் கூறி இருப்பதாவது:-
"கடன் தள்ளுபடி மற்றும் பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை போன்ற விவசாயிகளின் கோரிக்கைகளை மத்திய அரசு புறக்கணித்து வருகிறது. 3 மாதங்களில் 767 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டது வெறும் புள்ளி விவரமாக இல்லை. இவை அழிக்கப்பட்ட 767 குடும்பங்கள். அரசாங்கமோ அமைதியாக இருக்கிறது. அலட்சியமாக பார்த்துக் கொண்டிருக்கிறது. விதை, உரம் மற்றும் டீசல் விலை உயர்வால் விவசாயிகள் ஒவ்வொரு நாளும் கடனில் மூழ்கி வருகின்றனர். ஆனால் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. அவர்கள் கடன் தள்ளுபடி கோரும்போது விவசாயிகள் புறக்கணிக்கப்படுகிறார்கள்." இவ்வாறு அவர் பதிவிட்டு உள்ளார்.