
சாயல்குடி அருகே பெரியகுளம் கிராமத்தில் ஆண்டுதோறும் மொகரம் பண்டிகையில் இஸ்லாமியர்களுடன் இந்துக்களும் இணைந்து, சமூக நல்லிணக்கத்தை போற்றும் நிகழ்வாக நடத்தி வருகின்றனர்.
இது குறித்து பெரியகுளம் கிராம மக்கள் கூறுகையில், "பல ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் அசேன், உசேன், என இரு சகோதரர்கள் இருந்தனர். அவர்கள் அப்பொழுது நடைபெற்ற போரில் இறந்தனர். இதனை கேள்விப்பட்ட அவர்களது சகோதரி மாமுனாச்சி, கட்டைகளை அடுக்கி தீ மூட்டி தீயில் இறங்கி உயிரை மாய்த்துக்கொண்டார்.
அதன் பின்பு அந்த கிராமத்தில் கொடிய காலரா நோயால் பாதிக்கப்பட்டு மக்கள் ஒவ்வொருவதாக இறந்தனர். அப்போது அங்குள்ள ஒரு பெண்ணின் கனவில் தலையில் முக்காடு அணிந்து பெண் போன்ற வடிவம் தோன்றி, மொகரம் நாளில் கட்டைகளை அடுக்கி தீ மூட்டி மக்கள் தீ இறங்கி வழிபட்டால், காலரா நோய் கட்டுப்படும் எனக் கூறி மறைந்தது. கனவில் தோன்றியதை பொதுமக்களிடம் அந்தப் பெண் தெரிவிக்க, மக்களும் கட்டைகளை அடுக்கி தீ மூட்டி அதில் இறங்கி வழிபட்டனர்.
கனவில் தோன்றிய பெண் கூறிய படி அந்த கடுமையான நோய் தீர்ந்தது. அது முதல் பெரியகுளம் கிராமத்தில் மொகரம் முதல் நாள் காப்பு கட்டி பதினோராவது நாள் விறகுகளை அடுக்கி தீமூட்டி பூக்குழி இறங்கும் நிகழ்வு நடைபெறுகிறது" என தெரிவித்தனர்.
அவ்வகையில் இந்த ஆண்டும் மொகரம் பண்டிகையை முன்னிட்டு மதநல்லிணக்க பூக்குழி இறங்கும் விழா நடைபெற்றது. ஆண்கள் பூக்குழி இறங்கியும், பெண்கள் தலையில் முக்காடு அணிந்து தீக்கங்குகளை தலையில் போட்டும் மாமுனாச்சியை வேண்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.