
சென்னை,
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வழங்கப்பட்டது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-
"தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், துணை முதல்-அமைச்சரும், மாநில திட்டக் குழுவின் அலுவல் சார் துணைத் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் மாநில திட்டக் குழுவின் செயல் துணைத் தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் சந்தித்து, மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட - தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாத சுரங்கங்களின் மறுசீரமைப்பு சாத்திய கூறுகளை மதிப்பீடு செய்தல், குழந்தைகளின் ஊட்டச்சத்து - முக்கிய சவால்களும், தீர்க்கும் உத்திகளும், தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் நகர்ப்புற மீள்தன்மையை மேம்படுத்துவதற்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளின் (NbS) கட்டமைப்பு, நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வெப்பம் அழுத்தம்: தமிழ்நாட்டில் கட்டமைக்கப்பட்ட பகுதிகள் மற்றும் காலநிலை- பத்தாண்டுகளுக்கான மதிப்பீடு ஆகிய நான்கு அறிக்கைகளை வழங்கினர்.
மாநில திட்டக்குழுவானது தமிழ்நாடு முதல்-அமைச்சர் தலைமையில் செயல்படும் ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவாகும். தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் முன்னோடி மக்கள் நல திட்டங்களை மதிப்பீட்டு ஆய்வு செய்தல் மற்றும் அரசு ஆளுகையில் எழும் புதிய தேவைகளுக்கேற்ப கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், பல்வேறு ஆய்வுகள் நடத்தி அறிக்கை தயாரிப்பதிலும் தனது பங்களிப்பை மாநில திட்டக்குழு நல்கி வருகிறது.
முதல்-அமைச்சரிடம் இன்று சமர்பித்த அறிக்கைகளின் முக்கிய அம்சங்கள்:
1. தமிழ்நாட்டில் பயன்பாட்டில் இல்லாத சுரங்கங்களின் மறுசீரமைப்பு சாத்திய கூறுகளை மதிப்பீடு செய்தல்:
ஆரோவில் தாவரவியல் சேவைகள், தமிழ்நாடு மாநில திட்டக்குழுவுடன் இணைந்து சுற்றுச்சூழல் மறுசீரமைப்பிற்காக, மாநிலம் முழுவதும் கைவிடப்பட்ட மற்றும் குறைவாக பயன்படுத்தும் சுரங்கப் பகுதிகளைக் கண்டறிந்து அவற்றை மதிப்பீடு செய்து, புவிசார் தொழில் நுட்பங்கள் மற்றும் செயற்கைகோள் தொழில்நுட்பத்துடன் தமிழ்நாட்டில் உள்ள 3000-க்கும் மேற்பட்ட சுரங்கங்கள் வரைபடங்களாக்கப்பட்டு அவற்றில் மாதிரி தேர்வு முறையின் அடிப்படையில் 40 சுரங்கங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
இச்சுரங்கங்களை ஆய்வு செய்து மண்ணின் தரம், நீர் இருப்பு, நிலைத்தன்மை மற்றும் சுற்றுச்சூழல் போன்ற காரணிகளின் அடிப்படையில் அவற்றை மறுசீரமைப்பிற்கான திறன் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கம், நீர் பாதுகாப்பு, வேளாண் காடு வளர்ப்பு, பொழுதுபோக்கு பூங்கா அமைத்தல் மற்றும் சூரிய ஆற்றல் மேம்பாடு போன்றவற்றின் அடிப்படையில் சுரங்கங்களின் மறுசீரமைப்பு தன்மை பிரித்து வழங்கப்பட்டுள்ளது. சுண்ணாம்புக் கல் மற்றும் மேக்னிசைட் சுரங்கங்கள் அவற்றின் அளவு மற்றும் மென்மையான மேற்பரப்பின் காரணமாக சுரங்கங்களின் மீட்டெடுப்பு சாத்தியமுள்ளவையாக உள்ளன. அதேசமயம், கிரானைட் மற்றும் கரடுமுரடான கற்சுரங்கங்கள், கடினமான பாறை மேற்பரப்புகள் ஆகியவற்றால் சில சுரங்கங்களை மீட்டெடுப்பதில் அதிக அளவு சிரமங்கள் உள்ளது.
இந்த ஆய்வு, தரவு சார்ந்த கட்டமைப்பின் வாயிலாக நிலையான நிலப்பயன்பாட்டுத் திட்டமிடலை வழிநடத்தவும், சீரழிந்த சுரங்கப் பகுதிகளை சூழலியல் மற்றும் சமூகத்திற்கு நன்மை பயக்கும் நிலபரப்புகளாக மாற்றவும் உதவும்.
2. குழந்தைகளின் ஊட்டச்சத்து – முக்கிய சவால்களும், தீர்க்கும் உத்திகளும்:
குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைப்பாட்டின் வெளிப்பாடுகளான தீவிர மெலிவு, உயரக்குறைவு, எடைகுறைவு ஆகிய நிலைகள், நுண்ணூட்டச்சத்துக் குறைபாடுகளின் அடிப்படையில், ஒரு முயற்சியாக, தமிழ்நாடு அரசின் மாநில திட்டக்குழு, மருத்துவ வல்லுநர்கள், ஊட்டச்சத்து வல்லுநர்கள், துறைசார் வல்லுநர்கள், கள ஆராய்ச்சியாளர் மற்றும் அலுவலர்கள் கொண்டு ஒரு கருத்தரங்கத்தை 2025 மார்ச் மாதத்தில் நடத்தியது. இக்கருத்தரங்கில், குழந்தைகளின் ஊட்டச்சத்துக் குறைபாடு குறிப்பாக கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு, மிதமான தீவிர ஊட்டச்சத்துக் குறைபாடு குறித்த விவாதங்கள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து பல ஆலோசணைகள் மேற்கொள்ளப்பட்டு தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, குழந்தை ஊட்டச்சத்து குறித்த விரிவான கண்ணோட்டத்தை வழங்குகிறது. கடுமையான தீவிர ஊட்டச்சத்துக் குறைப்பாடு (SAM) மற்றும் மிதமான தீவிர ஊட்டச்சத்துக் குறைப்பாடு (MAM) ஆகியவற்றின் காரணங்கள் மற்றும் சிகிச்சையில் கவனம் செலுத்துகிறது. தொடர்ந்து ஆரம்ப கால தாய்ப்பாலூட்டல், குழந்தையின் ஆறு மாத காலம் வரை தாய்ப்பால் மட்டுமே ஊட்டுதல், சிகிச்சை முறை உணவு, (உணவில் பன்முகத்தன்மை (அ) பலவகையான உணவுகள்), உடலுக்கு உகந்த உணவு முறைகள், குடல் ஆரோக்கியத்தின் முக்கியவத்துவம், தொடர்ந்து வளர்ச்சியைக் கண்காணித்தல் மற்றும் செலவு குறைந்த பிற ஊட்டச்சத்து தலையீடுகள் /திட்டங்கள் குறித்த தகவல்களை இந்த அறிக்கை ஒருங்கிணைத்து வழங்குகிறது. குழந்தை ஊட்டச்சத்தை மேம்படுத்துவதற்கும், ஊட்டச்சத்துக் குறைப்பாட்டை எதிர்த்துப் போராடுவதில் மீள்திறன் கொண்ட சுகாதார அமைப்புகளை உருவாக்குவதற்கும் ஆதாரம் சார்ந்த உத்திகளையும் இது ஆராய்ந்து அளிக்கிறது.
3. தமிழ்நாட்டில் இரண்டாம் நிலை நகரங்களில் நகர்ப்புற மீள்தன்மையை மேம்படுத்துவதற்கான இயற்கை அடிப்படையிலான தீர்வுகளின் (NbS) கட்டமைப்பு:
தமிழ்நாட்டில் அதிக அளவில் நகரமயமாதல் மற்றும் நகரங்களில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் நகர்ப்புற வெள்ளம், வெப்ப அலைகள், நீர் பற்றாக்குறை மற்றும் பல்லுயிர் இழப்பு உள்ளிட்ட சவால்களை எதிர்கொள்ளவும், நிலையான நகர்ப்புற மேம்பாட்டிற்கான அவசர தேவையை உணர்ந்து, தமிழ்நாடு மாநில திட்டக்குழுவின் தமிழ்நாடு நிலப்பயன்பாடு ஆராய்ச்சி வாரியம், சர்வதேச நிறுவனமான ஜெர்மன் கூட்டமைப்பு (GIZ) மற்றும் CUBE (IIT Madras) உடன் இணைந்து நகர்புற மீட்டெடுத்தலை மேம்படுத்த ஒருங்கிணைந்த இயற்கைசார் தீர்வு (NbS) செயல் உத்தி மற்றும் கட்டமைப்பு அறிக்கையை தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் நிலை நகரத்திற்காக (Tier-2 Cities) தயாரித்து வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கை, இயற்கைசார் தீர்வு மூலமாக இயற்கை சுற்றுச்சூழல் அமைப்புகள், காலநிலை மீள்தன்மை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய மேம்பாட்டை இரண்டாம் நிலை நகரங்களில் வழங்க உதவுகிறது. தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான மாநில செயல் திட்டம் (SAPCC 2.0) ஆகியவற்றின் அடிப்படையில், இந்த கட்டமைப்பு பாதிப்பு மற்றும் இடர் மதிப்பீடு, இடர்சார்ந்து ஆய்வு, பங்குதாரர்களின் ஆலோசனைகள், சூழலுக்கு பொருத்தமான
மாதிரியை தேர்ந்தெடுப்பது, இயற்கை சார் தீர்வுகளை அடையாளம் காணுதல் மற்றும் நிர்வாக அமைப்புகள் என ஆறு கட்டமாக அமைந்த செயல்முறையை முன்மொழிகிறது.
தமிழ்நாடு மற்றும் உலகளாவிய நடைமுறைகள், வெற்றிகரமான எடுத்துக்காட்டுகளின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இவ்வறிக்கை, சென்னை மற்றும் கோயம்புத்துரில் உள்ள ஈரநில மீட்பு, பிச்சாவரத்தில் உள்ள சதுப்புநிலத்தில் அலையாத்தி காடுகளை உருவாக்குதல் மற்றும் சிறிய நகரங்களில் மேற்கொண்டுள்ள பசுமை உட்கட்டமைப்புகள் போன்றவற்றை சான்றாக எடுத்துக்காட்டுகிறது. பேரழிவு காலங்களில் அபாயங்களை குறைப்பதற்கும், நகர்ப்புற வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் மற்றும் சுற்றுச்சூழல் சேவைகளை மீட்டெடுப்பதற்கும், இரண்டாம் நிலை நகரங்களில் இம்முறையை பயன்படுத்துவதன் முக்கியத்துவத்தை இவ்வறிக்கை வலியுறுத்துகிறது.
மேலும், ஒருங்கிணைந்த புவியியல் தகவலமைப்பின் அடிப்படையிலான பாதிப்புக் குறியீடுகள் உள்ளிட்ட முக்கிய செயல்படுத்துதல்களை எடுத்துக்காட்டுகிறது. இவ்வறிக்கையானது கொள்கைகள், வரையறுக்கப்பட்ட நிதி ஒதுக்கீடு மற்றும் குறைந்த விழிப்புணர்வு போன்ற தடைகளை கண்டறிந்து கொள்கை சீர்திருத்தம், சிறப்பு திட்டங்கள், மாநில இயற்கை சார் தீர்வு மையம் நிறுவுதல் உள்ளிட்ட 10 அம்ச ஆலோசனைகளை முன்மொழிகிறது. நிலையான வளர்ச்சி இலக்குகள் மற்றும் தமிழ்நாடு தொலைநோக்கு 2030-ன் அடிப்படையில் நகர்ப்புற நெகிழ்ச்சித் தன்மையை அளவிடுவதற்கு தமிழ்நாடு இயற்கை சார் தீர்வுகளை ஒரு சிறப்பு திட்டமாக செயல்படுத்த இந்த அறிக்கை பரிந்துரைக்கிறது."
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.