புதுடெல்லி: இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம், அணுஆயுத அச்சுறுத்தல் விடுக்கும் பாகிஸ்தான் ராணுவத்தின் மன உறுதி குறைந்து வருவதாகவும், உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க தலைவர்கள் தடுமாறி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜம்மு – காஷ்மீரின் பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலால் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதற்றம் அதிகரித்துள்ளது. இந்தியாவின் ராணுவம் மற்றும் ராஜதந்திர நடவடிக்கைகளால் பாகிஸ்தான் நிலைதடுமாறி உள்ளது.
ஆனால் பாகிஸ்தானின் எதிர்வினையானது, அணு ஆயுத அச்சுறுத்தல்கள், சமூக ஊடகங்களில் பொய்யான பிரசாரம் மற்றும் ராஜதந்திர சிக்கல்களால் நம்பிக்கையின்மை போக்கை கடைபிடித்து வருகிறது. பாகிஸ்தான் ராணுவம் ஏற்கனவே போர் வியூக ரீதியாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. பொருளாதார ரீதியாக பலவீனமாகவும், உள்நாட்டில் பிளவுபட்ட நிலையில் பாகிஸ்தான் உள்ளது. இன்றைய நிலையில் எவ்வித மோதலையும் கையாளும் திறனில் பாகிஸ்தான் இல்லை. இதுபோன்ற சூழலில், சமூக ஊடகங்கள் மற்றும் சில உள்நாட்டு ஊடக தளங்கள் மூலம் இந்தியாவுக்கு எதிரான தவறான ராணுவ தகவல்களை பிரசாரம் செய்து வருகிறது.
சமீபத்தில், பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டின் முக்கியப் பகுதிகளை ஆய்வு செய்யும் காணொளி வெளியானது. ஆனால் இந்த காணொளி கடந்த 2022ம் ஆண்டின் பழைய வீடியோ காட்சிகள் என்று இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்தது. பாகிஸ்தானுக்குள் மக்களிடையே குறைந்து வரும் நம்பிக்கையை கையாள்வதற்கான முயற்சியாக, இதுபோன்ற பொய்யான தகவல்களை பாகிஸ்தான் பரப்பி வருவதாக இந்தியா தரப்பில் கூறப்படுகிறது. கடந்த ஏப்ரல் 29 அன்று பாகிஸ்தான் விமானப்படை வெளியிட்ட வீடியோவில், ரஷ்யாவின் எஸ்-400 ஏவுகணை ஒன்று ஸ்பேஸ்எக்ஸின் ஃபால்கன் 9 ராக்கெட் மற்றும் கால் ஆஃப் டூட்டி வீடியோ கேம் ஆகியவற்றின் காட்சிகள் காட்டப்பட்டன. பாகிஸ்தானிடம் இதுபோன்ற ஏவுகணை எதுவும் இல்லை. இந்த அபத்தமான விளம்பரத்தை பாகிஸ்தான் விமானப்படை வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
சமூக ஊடகங்களில் பொய்யான செய்தி, புகைப்படம், வீடியோக்களை பாகிஸ்தான் தரப்பில் வெளியிடப்படும் நிலையில், பாகிஸ்தானின் சில மூத்த அமைச்சர்கள் அணு ஆயுதத் தாக்குதலை அச்சுறுத்துகிறார்கள். மறுபுறம் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் சர்வதேச நடுநிலை விசாரணைக்கு வேண்டுகோள் விடுக்கிறார். பாகிஸ்தானுக்கு ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்பட்டால், அணு ஆயுதத்தை கையில் எடுப்போம் என்று அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் நேரடியாக அச்சுறுத்தினார்.
அந்நாட்டு ரயில்வே அமைச்சர் ஹனிஃப் அப்பாசி, சிந்து நதி நீர் நிறுத்தப்பட்டால் அணு ஆயுதத்தை வீசுவோம் என்று அச்சுறுத்தலை விடுத்தார். இந்தியாவின் ராணுவ நடவடிக்கைக்கு அஞ்சிய பாகிஸ்தானின் உள்துறை அமைச்சகம், சர்வதேச நாடுகளிடம் இருநாட்டு பிரச்னைக்கு மத்தியஸ்தம் செய்ய வேண்டுகோள் விடுத்தது. ஆனால் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் போன்ற முக்கிய நாடுகள், எந்தவொரு நேரடித் தலையீட்டையும் நிராகரித்தது. மேலும், நிதானத்தைக் கடைப்பிடிக்க அறிவுறுத்தியுள்ளன.
பாகிஸ்தான் ராணுவத்திற்குள் மன உறுதி குறைந்து வருவதாகவும் செய்திகள் வந்துள்ளதாக ‘டைம்ஸ் நவ்’ செய்தி வெளியிட்டுள்ளது. ராணுவத்தில் இருந்து ராஜினாமா செய்யக் கோரும் ஏராளமான வீரர்கள் பற்றிய கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த கடிதம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. அதேநேரம் இந்த கடிதத்தை பாகிஸ்தான் நிராகரிக்கவில்லை. பாகிஸ்தானின் ராணுவ பட்ஜெட் வெறும் 7.6 பில்லியன் டாலர்கள் மட்டுமே. இந்தியாவுடன் ஒப்பிடும்போது மிகக் குறைவு.
நிபுணர்களின் கூற்றுப்படி, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டில் பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கையில் இறங்கினால், ஒரு நாளைக்கு $15 முதல் 30 லட்சம் செலவை சந்திக்கும். அந்நிய செலாவணி இருப்பு கரைந்துள்ள நிலையில், இன்றைய நிலையில் பெரும் பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பஹல்காம் விஷயத்தில், இந்தியா தரப்பில் உறுதியான மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில், பாகிஸ்தானின் பொய் பிரசாரம், அணு ஆயுத அச்சுறுத்தல் மற்றும் உள்நாட்டு அதிருப்தி ஆகியவை அந்நாட்டை தொடர்ந்து பலவீனப்படுத்தி வருகின்றன என்றும் நிபுணர்கள் கூறினர்.
ராணுவ தளபதியும் அலறல்;
இந்தியாவின் தொடர் நடவடிக்கைக்கு மத்தியில், பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் முன் அந்நாட்டு ராணுவ தளபதி அசிம் முனீர் ஆற்றிய உரையில், ‘பாகிஸ்தானின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை எந்த விலை கொடுத்தாவது பாதுகாக்க வேண்டும். இந்தியாவின் எந்தவொரு ராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையையும் விரைவாக, உறுதியான மற்றும் வலிமையான பதிலடி கொடுக்க வேண்டும். பிராந்திய அமைதிக்கு பாகிஸ்தான் உறுதிபூண்டுள்ளது. இந்தியாவால் ஏற்படுத்தப்படும் எந்தவொரு பாதிப்புக்கும், விரைவாகவும், தீர்க்கமாகவும் பதிலடி கொடுக்கப்படும்’ என்று கூறினார்.
The post இந்தியாவுக்கு எதிராக பொய் பிரசாரம், அணுஆயுத அச்சுறுத்தல் விடுக்கும் பாக். ராணுவத்தின் மன உறுதி குறைந்து வருவது உண்மையா?: உள்நாட்டில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை சமாளிக்க தலைவர்கள் தடுமாற்றம் appeared first on Dinakaran.