
வாஷிங்டன்:
அமெரிக்காவில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தலைமையிலான புதிய நிர்வாகம், பட்ஜெட்டைக் குறைத்ததால், இந்தியா, வங்காளதேசம் உள்ளிட்ட பல நாடுகளுக்கான கோடிக்கணக்கான டாலர் நிதியை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
இந்திய தேர்தல்களில் வாக்காளர்கள் வாக்களிக்கும் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட 21 மில்லியன் டாலர் திட்டத்தையும், வங்காளதேசத்தின் அரசியல் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தும் நோக்கில் 29 மில்லியன் டாலர் செலவிலான முயற்சியையும் நிறுத்த அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக எலான் மஸ்க்கின் அரசாங்க செயல்திறன் துறை (DOGE) இன்று அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக செயல்திறன் துறை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. அதில், அமெரிக்க வரி செலுத்துவோரின் நிதி இந்த திட்டங்களுக்கு செலவிடப்படவிருந்ததாகவும், அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன என்றும் கூறியுள்ளது. இந்தியா வங்காளதேசம் மட்டுமின்றி நிதியுதவி ரத்து செய்யப்படும் பிற நாடுகள் மற்றும் ரத்து செய்யப்பட்ட நிதி தொடர்பான முழு விவரங்களையும் பதிவிட்டுள்ளது.
சமீபத்தில் டொனால்ட் டிரம்ப், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அமெரிக்க-இந்தியா உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக முக்கிய அறிவிப்புகளை இருவரும் வெளியிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த நிதி ரத்து தொடர்பான அறிவிப்பு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும், உலகளாவிய உதவி திட்டங்களுக்காக வெளிநாடுகளுக்கு வழங்கப்படும் அனைத்து வகையான உதவிகளையும் 90 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் நிர்வாக உத்தரவில் கையெழுத்திட்டார். அதன்படி, அமெரிக்க அரசின் உதவி திட்டங்களுக்கு தற்போது இருப்பில் இருக்கும் நிதியை தவிர புதிய நிதியை செலவு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.
எலாஸ் மஸ்க் தலைமையிலான அரசாங்க செயல்திறன் துறை DOGE என அழைக்கப்படுகிறது. இந்த துறையானது, அரசாங்க ஊழியர்களை பணிநீக்கம் செய்வதற்கும், அரசாங்க செலவினங்களை பெருமளவு குறைப்பதற்கும் டிரம்பின் அனுமதியுடன் அதிரடி நடவடிக்கையை தொடங்கியுள்ளது. அவரது முக்கிய இலக்குகளில் வெளிநாடுகளுக்கு நிதி உதவி வழங்கக்கூடிய அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனமும் (USAID) ஒன்றாகும். இந்த நிறுவனம் வழங்கும் நிதி, கொடிய திட்டங்களை தொடங்க பயன்படுத்தப்பட்டதாக மஸ்க் குற்றம் சாட்டுகிறார். மேலும் அதை ஒரு குற்றவியல் அமைப்பு என்றும் விமர்சனம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.