
புதுடெல்லி,
இந்தியாவில் முதன்முறையாக உலக பாரா தடகள கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் வருகிற 11-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெறும். இதில், 20 நாடுகளை சேர்ந்த பாரா தடகள வீரர், வீராங்கனைகள் பங்கேற்பார்கள். இதனால், தடகள போட்டிகளில் ஒரு வரலாற்று தருண நிகழ்வை இந்தியா ஏற்படுத்த உள்ளது.
புதுடெல்லியில் உள்ள ஜவகர்லால் நேரு ஸ்டேடியத்தில் இதற்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. 3 நாட்களில் மொத்தம் 90 போட்டிகளை நடத்த திட்டம் வகுக்கப்பட்டு உள்ளது. இதனை இந்திய பாராலிம்பிக்ஸ் கமிட்டி வெளியிட்ட ஊடக அறிக்கை தெரிவிக்கின்றது.
உலகளாவிய பாரா தடகளத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிலைப்பாட்டை இந்த நிகழ்ச்சியானது பிரதிபலிக்கும். விளையாட்டு போட்டிகளில் உள்ளடக்கிய மற்றும் திறமையை வளர்த்தெடுக்கும் இந்தியாவின் உள்ளார்ந்த ஈடுபாட்டை மீண்டும் வலியுறுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி இருக்கும்.
போட்டி என்றளவில் இல்லாமல், வருங்காலத்தில் நடைபெற கூடிய சர்வதேச போட்டி தொடர்களுக்கான ஓர் எடுத்துக்காட்டாக இதனை அமைப்பதற்கான முயற்சியாகவும் இந்த கிராண்ட்பிரிக்ஸ் போட்டிகள் இருக்கும் என இந்திய பாராலிம்பிக் கமிட்டி தலைவர் தேவேந்திர ஜஜாரியா கூறியுள்ளார்.
உலக அரங்கில் நம்முடைய பாரா தடகள வீரர், வீராங்கனைகள் ஜொலிப்பதற்கு நாம் ஒரு தளம் அமைத்து கொடுத்திருக்கிறோம் என்றும் அவர் கூறியுள்ளார்.