
தேனி,
தேனி ஆண்டிப்பட்டியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
இரட்டை இலை சின்னம், பொதுச்செயலாளர் பதவி ஆகியவற்றை தனது கையில் வைத்து கொண்டு அதிமுகவை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி பலவீனப்படுத்தி வருகிறார். வழக்குகளில் இருந்து தன்னை காப்பாற்றி கொள்வதற்கு, திமுக அரசுக்கு அவர் சுயநலமாக அதிமுகவை பயன்படுத்துகிறார். பண பலம், படை பலம், இரட்டை இலை சின்னம் ஆகியவை இருக்கிறது என்று வாயை பொத்தி கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு காவடி தூக்குபவர்கள் விழித்து கொள்ள வேண்டும். இல்லையெனில், 2026-ம் ஆண்டுக்கு பின்னர் அதிமுக என்ற மாபெரும் இயக்கத்துக்கு அவர் மூடுவிழா நடத்தி விடுவார்.
லாட்டரி சீட்டில் பரிசு விழுந்ததை போல முதல்-அமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு, பதவியை கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்தவர்தான் எடப்பாடி பழனிசாமி. துரோகத்தை தவிர வேறு எதுவும் தெரியாத அவர், மற்றவர்களை துரோகி என்று பேசுவது நகைச்சுவையாக இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், விசுவாசமானவர்கள் எல்லோரும் அவருடைய அகராதியில் துரோகிகளாக தெரிகிறார்கள். வருங்கால அரசியல் வரலாற்றில், துரோகம் என்ற சொல்லுக்கு உவமையாக இருக்கக்கூடிய பெயர் என்றால், அது எடப்பாடி பழனிசாமியாக தான் இருக்கும்.
பொது இடத்தில் எப்படி பேச வேண்டும் என்று தெரியாமல் வாய்க்கு வந்ததை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசி வருகிறார். அவரது பேச்சை அருகில் உள்ள பெண்கள் எப்படி சகித்து கொள்கிறார்கள் என்று தெரியவில்லை. சீமானுடைய பேச்சால், ஒரு அரசியல் கட்சி தலைவராக அனைவருக்கும் தலைகுனிவு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.