சாம்பியன்ஸ் டிராபி: ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் தேர்வு செய்யப்பட்டது ஏன்..? ரோகித் சர்மா விளக்கம்

3 hours ago 1

துபாய்,

9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி தொடர் பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாயில் நடந்து வருகிறது. மற்ற லீக் ஆட்டங்கள் பாகிஸ்தானில் உள்ள லாகூர், கராச்சி, ராவல்பிண்டி ஆகிய நகரங்களில் நடைபெற்றது.

8 அணிகள் பங்கேற்ற இந்த தொடரில் லீக் சுற்று முடிவில் 'ஏ' பிரிவில் டாப்-2 இடங்களை பிடித்த இந்தியா, நியூசிலாந்து, 'பி' பிரிவில் தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. இதில் துபாயில் இன்று அரங்கேறும் முதலாவது அரைஇறுதியில் முன்னாள் சாம்பியன்களான இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

முன்னதாக இந்த தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் ஜெய்ஸ்வால் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டார். ஏற்கனவே ஜடேஜா, குல்தீப், அக்சர் மற்றும் வாஷிங்டன் ஆகிய 4 சுழற்பந்து வீச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்ட வேளையில், 5-வதாக வருண் சக்ரவர்த்தியும் சேர்க்கப்பட்டது விமர்சனத்தை ஏற்படுத்தியது.

இருப்பினும் சாம்பியன்ஸ் டிராபியில் அறிமுகம் ஆன முதல் போட்டியிலேயே நியூசிலாந்துக்கு எதிராக 5 விக்கெட்டுகள் வீழ்த்திய அவர், தன்னை தேர்வு செய்தது சரிதான் என்று நிரூபித்து விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்தார்.

இந்நிலையில் ஜெய்ஸ்வாலுக்கு பதிலாக வருண் சக்ரவர்த்தியை தேர்ந்தெடுத்ததற்கான காரணம் குறித்து இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "வருண் விளையாடுவதற்காக நாங்கள் ஒரு பேட்ஸ்மேனை தியாகம் செய்ய வேண்டும். இந்த தொடரில் 5 போட்டிகள் மட்டுமே இருக்கிறது. எனவே காயத்தை சந்திக்காத வரை அந்த எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் விளையாட மாட்டார் என்று நாங்கள் கருதினோம். அதே சமயம் காயத்தை சந்தித்தால் நீங்கள் அவரை விளையாட அழைக்க வேண்டும். ஆனால் வருண் காயத்தை சந்திக்காமல் விளையாடுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பது எங்களுக்கு தெரியும்.

எங்களிடம் 4 ஸ்பின்னர்கள் இருந்தால் அவர்களை விளையாட வைக்க வாய்ப்பு இருக்கும் என்பதும் தெரியும். துபாயில் கடந்த 2 மாதங்களாக என்ன நடந்தது என்பதைப் பற்றி உன்னிப்பாக கேட்டோம். இங்கே நிறைய போட்டிகள் விளையாடப்பட்டன. அதிலும் இங்கே நடைபெற்ற சர்வதேச டி20 லீக் தொடரை நாங்கள் பார்த்தோம். அதில் மெதுவாக வீசும் பவுலர்களுக்கு உதவி கிடைப்பதாக நாங்கள் கருதினோம்.

எனவே பேட்ஸ்மேன் தேவைப்பட்டால் அதை சமாளிக்க ரிஷப் பண்ட் இருக்கிறார். அதனால் சுழல் பந்து வீச்சில் எக்ஸ்ட்ரா தேர்வை தேர்ந்தெடுக்கலாம் என்ற நோக்கத்துடன் வருணை தேர்ந்தெடுத்தோம். அவரை போட்டிகளில் பயன்படுத்த வாய்ப்பு ஏற்படும் என்றும் நினைத்தோம். இதுதான் அவரை அணியில் தேர்ந்தெடுப்பதற்காக பின்புலத்தில் நாங்கள் சிந்தித்த அம்சங்களாகும்" என்று கூறினார்.

Read Entire Article