
பெய்ஜிங்,
அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதலே பல்வேறு அதிரடிகளை மேற்கொண்டு வருகிறார். அதில் அமெரிக்க பொருட்களுக்கு விதிக்கப்படும் அளவிற்கு அதே வரியை, வரி விதிக்கும் நாடுகள் மீதும் விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதன்படி, கடந்த 9 ஆம் தேதி பரஸ்பர வரி விதிப்பு அமலுக்கு வந்தது. இந்தியா மீதும் 26 சதவீதம் வரியை டிரம்ப் விதித்தார்.
வல்லரசு நாடான அமெரிக்காவின் இந்த வரி விதிப்பால் பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டன. பல்வேறு நாடுகளும் வரி விதிப்புக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் தற்போது பேச்சுவார்த்தை நடத்த ஏதுவாக 90 நாட்களுக்கு வரி விதிப்பை நிறுத்தி வைத்து இருக்கிறார். எனினும், சீனா மீது மட்டும் விதிக்கப்பட்ட வரி விதிப்பை நிறுத்தி வைக்கவில்லை. மாறாக வரி விதிப்பை அதிகப்படுத்தியுள்ளார். சீன இறக்குமதிகள் மீது அமெரிக்கா 245% வரை வரிகளை விதித்துள்ளது. சீனாவின் பதிலடி வர்த்தக நடவடிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக இந்த அறிவிப்பை கடந்த 19 ஆம் தேதி அமரிக்கா வெளியிட்டது.
அமெரிக்கா தற்போது ஏகத்திற்கும் வரியை விதித்து இருக்க கூடிய நிலையில், இந்தியாவின் பக்கம் சீனா தனது கவனத்தை திருப்பியிருக்கிறது. அதாவது, இந்தியாவில் இருந்து அதிக பொருட்களை இறக்குமதி செய்ய தயார் எனவும், இந்தியாவின் வர்த்தக பற்றாக்குறையை போக்கும் வகையில், சீன சந்தைக்குள் இந்திய பொருட்களை இறக்கி இந்திய தொழில்களுக்கு உதவ தயாராக உள்ளதையும் இந்தியாவுக்கான சீனா தூதர் தெரிவித்துள்ளார்.