இந்தியாவில் அறிமுகமானது 'ஜியோஹாட்ஸ்டார்'

1 week ago 4

மும்பை,

ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்கள் கூட்டாக இணைந்து ஓடிடி ஸ்ட்ரீமிங் தளமான 'ஜியோஹாட்ஸ்டார்' என்ற தளத்தை இன்று இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. பல்வேறு பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு சார்ந்த கன்டென்ட்களை இந்த தளத்தின் மூலம் பயனர்கள் கண்டு ரசிக்கலாம்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (ஆர்ஐஎல்) மற்றும் வால்ட் டிஸ்னி நிறுவனங்கள் டிவி மற்றும் டிஜிட்டல் தளங்கள் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்தன. அந்த வகையில் வயாகாம் 18 மற்றும் ஸ்டார் இந்தியாவின் கூட்டு நிறுவன முயற்சியாக ஜியோஸ்டார் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஜியோ சினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்களின் இணைப்பாக ஜியோஹாட்ஸ்டார் தளம் இன்று அறிமுகம் ஆகியுள்ளது. இந்தியாவில் ஓடிடி தள பயனர்கள் விளையாட்டு சார்ந்து அதிகம் பயன்படுத்துவது இந்த இரண்டு தளங்களை தான். தற்போது அந்த தளங்கள் இரண்டும் ஒன்றிணைந்துள்ளது. 'கன்டென்ட், பயனர்கள் மற்றும் பார்வையாளர்களின் எண்ணிக்கை உள்ளிட்டவை உலக அளவில் இந்த துறையில் இதுவரை இல்லாத மைல்கல்' என ஜியோஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த தளத்தின் பயனர்களின் எண்ணிக்கை மட்டும் சுமார் 50 கோடி என தகவல். 19 மொழிகளில் இந்த தளத்தின் மூலம் பயனர்கள் கன்டென்ட்களை பெறலாம்.

பயனர்களை ஈர்க்கும் வகையில் ரூ.149 முதல் சந்தா செலுத்தி ஜியோஹாட்ஸ்டார் தளத்தை பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஜியோசினிமா மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார் தளங்களின் சந்தாதாரர்களாக உள்ளவர்கள் ஜியோஹாட்ஸ்டாரை தடையின்றி பழைய சந்தாவுடன் தொடர்ந்து பயன்படுத்த முடியும்.

விளையாட்டு, உலக சினிமா, இந்திய சினிமா என பல்வேறு கன்டென்ட்களை ஜியோஹாட்ஸ்டாரில் பயனர்கள் காணலாம். மேலும், டிஜிட்டல் கிரியேட்டர்களுக்கு வாய்ப்பளிக்கும் வகையில் 'ஸ்பார்க்ஸ்' என்ற சிறப்பு பக்கத்தையும் அறிமுகம் செய்துள்ளது. இந்தியாவில் ஓடிடி சந்தை மதிப்பு கடந்த 2022-ல் 200.5 பில்லியன் டாலர்கள் என ஆய்வு நிறுவனம் ஒன்று தெரிவித்தது. வரும் 2032-ல் இந்த மதிப்பு 836.5 பில்லியன் டாலர்களாக இருக்கும் என்றும் அந்த நிறுவனம் கணித்துள்ளது. இந்தச் சூழலில் தான் ஜியோஹாட்ஸ்டார் தற்போது அறிமுகமாகி உள்ளது.

Read Entire Article