இந்தியாவின் பஞ்சாப் எல்லையில் சீன ட்ரோன் மூலம் போதைப்பொருள் ஆயுதங்களை வீசி செல்லும் பாகிஸ்தான்: ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னும் குறையவில்லை

2 hours ago 1

புதுடெல்லி: பஞ்சாப் எல்லையில் போதைப்பொருள், ஆயுதங்களை சீன ட்ரோன் மூலம் பாகிஸ்தான் வீசிச் செல்லுவதாகவும், ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னும் குறையவில்லை என்று எல்லைப் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்தியாவின் பஞ்சாப் எல்லையில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை வீசுவது அதிகரித்து வருவதாக எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) தரவுகள் தெரிவிக்கின்றன. ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து கடந்த 10ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவித்த பின்னரும், பாகிஸ்தான் தரப்பில் இருந்து இந்திய எல்லையில் போதைப் பொருள் மற்றும் ஆயுதங்கள் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 11ம் தேதி பிஎஸ்எஃப் மற்றும் பஞ்சாப் காவல்துறையின் கூட்டு நடவடிக்கைகளின் மூலம், அமிர்தசரஸ் மாவட்டம் ஷேக் பட்டி கிராமத்திற்கு அருகே மஞ்சள் நிற போதைப் பொருள் பாக்கெட் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதேநாளில் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட நிலையில், பாகிஸ்தானிலிருந்து ஆயுதங்களுடன் கூடிய ட்ரோன்கள் பறந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

இதில், குருதாஸ்பூர் மாவட்டத்தில் உள்ள கோலா டோலா கிராமத்திற்கு அருகே ஒரு ‘டிஜேஐ மாவிக் 3 கிளாசிக்’ ட்ரோனும், கஹன்கர் கிராமத்தில் மற்றொரு ட்ரோனுடன் ஒரு கைத்துப்பாக்கியும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் அதே நாளில், அமிர்தசரஸ் மாவட்டத்தில் உள்ள ராஜதல் கிராமத்தில் 559 கிராம் ஹெராயின் கண்டெடுக்கப்பட்டது. இந்த ட்ரோன்கள் பெரும்பாலும் சீனாவில் தயாரிக்கப்பட்டவை மற்றும் போதைப்பொருள், துப்பாக்கிகள் மற்றும் வெடிமருந்துகளை சப்ளை செய்வதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்று பிஎஸ்எஃப் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். பாகிஸ்தானின் இந்த ட்ரோன் நடவடிக்கைகள் இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படுவதாக பிஎஸ்எஃப் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு முதல் ட்ரோன் அச்சுறுத்தல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக அமிர்தசரஸ் மற்றும் தர்ன் தரன் பகுதிகளில் மிகவும் பரவலாக ட்ரோன் மூலம் சப்ளைகள் நடக்கிறது. இருந்தும் எல்லைப் பாதுகாப்பு படையினர், ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, பாகிஸ்தானில் இருந்தும் வரும் ட்ரோன்களை பறிமுதல் செய்யவும், அவற்றின் பயணப் பாதைகளை ஆய்வு செய்யவும், அவற்றின் செயல்பாடுகளை முடக்கியும் வருகின்றனர்.

மேலும், பஞ்சாப் காவல்துறையுடன் இணைந்து எல்லையில் கண்காணிப்பை அதிகரித்து, சிசிடிவி கேமராக்கள் மற்றும் உளவுத்துறை அடிப்படையிலான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்தாண்டில் மட்டும் 294 ட்ரோன்களை பஞ்சாப் எல்லையில் பறிமுதல் செய்ததாக எல்லைப் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்தன.

பாகிஸ்தானின் இந்த ட்ரோன் நடவடிக்கைகள் இந்தியாவில் அமைதியின்மையை ஏற்படுத்துவதற்கும், இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் மேற்கொள்ளப்படுவதாக பிஎஸ்எஃப் குற்றம் சாட்டியுள்ளது.

The post இந்தியாவின் பஞ்சாப் எல்லையில் சீன ட்ரோன் மூலம் போதைப்பொருள் ஆயுதங்களை வீசி செல்லும் பாகிஸ்தான்: ஆபரேஷன் சிந்தூருக்கு பின்னும் குறையவில்லை appeared first on Dinakaran.

Read Entire Article