இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்

3 months ago 22

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இரு அணிக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை, தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், 'இளம் புயல்' ஜெய்ஸ்வாலும் இறங்குவார்கள். சூப்பர் பார்மில் உள்ள ஜெய்ஸ்வாலின் அதிரடி ஜாலம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. நட்சத்திர வீரர் விராட் கோலி சமீப காலமாக பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. இந்த தொடரில் அவர் தனது பார்முக்கு திரும்புவது முக்கியம். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு அவரது சொந்த ஊர் மைதானம் என்பதால் அது அவருக்கு சாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது. இன்னும் 53 ரன் எடுத்தால் டெஸ்டில் 9 ஆயிரம் ரன்களை கடக்கும் 4-வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார். பந்து வீச்சில் ஜஸ்பிரித் பும்ரா, சிராஜ், அஸ்வின், ரவீந்திர ஜடேஜா கலக்க காத்திருக்கிறார்கள்.

இந்திய அணி 2012-ம் ஆண்டுக்கு பிறகு உள்நாட்டில் எந்த டெஸ்ட் தொடரையும் இழந்ததில்லை. அதாவது தொடர்ச்சியாக 18 டெஸ்ட் தொடர்களை கைப்பற்றி இருக்கும் இந்தியா அந்த வீறுநடையை தொடரும் உத்வேகத்துடன் தயாராகியுள்ளது.

நியூசிலாந்து அணியின் கேப்டன் டிம் சவுதி பதவி விலகியதால் டாம் லாதம் கேப்டன் பொறுப்பை ஏற்றுள்ளார். நியூசிலாந்து அணி வலுவானது தான். ஆனால் இந்திய துணை கண்டத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு சாதித்ததில்லை. குறிப்பாக இந்தியாவில் அந்த அணி இதுவரை டெஸ்ட் தொடரை வென்றதாக வரலாறு கிடையாது. பிரதான பேட்ஸ்மேன் கேன் வில்லியம்சன் காயத்தால் தொடக்க டெஸ்டில் ஆடமாட்டார் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இது நிச்சயம் அவர்களுக்கு பின்னடைவு தான். ரச்சின் ரவீந்திரா, டிவான் கான்வே, டேரில் மிட்செல், பிலிப்ஸ், கேப்டன் லாதம் ஆகியோர் நிலைத்து நின்று ஆடுவதை பொறுத்தே அவர்களின் ஸ்கோர் அமையும்.

போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால், விராட் கோலி, சுப்மன் கில் அல்லது சர்ப்ராஸ்கான், ரிஷப் பண்ட், லோகேஷ் ராகுல், ரவீந்திர ஜடேஜா, அஸ்வின், பும்ரா, முகமது சிராஜ், ஆகாஷ் தீப் அல்லது குல்தீப் யாதவ்.

நியூசிலாந்து: டாம் லாதம் (கேப்டன்), டிவான் கான்வே, வில் யங், ரச்சின் ரவீந்திரா, டேரில் மிட்செல், டாம் பிளன்டெல், கிளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னெர் அல்லது பிரேஸ்வெல், டிம் சவுதி, அஜாஸ் பட்டேல், வில்லியம் ஓ ரூர்கே.

காலை 9.30 மணிக்கு தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

 

Read Entire Article