இந்தியா கூட்டணி சட்டசபை தேர்தல்களுக்கானது அல்ல- பிரகாஷ் காரத்

3 hours ago 2

புதுடெல்லி,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவரும், கட்சியின் இடைக்கால ஒருங்கிணைப்பாளருமான பிரகாஷ் காரத், பி.டி.ஐ. செய்தி நிறுவனத்துக்கு சிறப்பு பேட்டி அளித்தார்.அப்போது அவர் இந்தியா கூட்டணி குறித்து விரிவாக பதில் அளித்தார். அவர் கூறியதாவது:-இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்டது. இந்த தேர்தலுக்கு பிறகு தேசிய அளவில் இந்த கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை எதுவும் நடைபெறவில்லை. அதில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு மாநில அளவில் சொந்த நலன்கள் உள்ளன.இந்தியா கூட்டணியின் உருவாக்கமும், சில மாநிலங்களில் அவற்றின் இணைந்த செயல்பாடும், பா.ஜனதா மக்களவையில் பெரும்பான்மையை இழக்க வழிவகுத்தது என்பது உண்மை.

அதன் பிறகு சட்டசபை தேர்தல்கள் நடந்தன. இதில் மராட்டியத்தில் மிகப்பெரும் பின்னடைவு ஏற்பட்டதாக கருதுகிறேன். அங்கே மக்களவை தேர்தலில் மகா விகாஸ் அகாடி சிறப்பாக செயல்பட்டு, பா.ஜனதாவை பெரும்பான்மையை இழக்கச்செய்தது. ஆனால் சட்டசபை தேர்தலில் அது தலைகீழானது.சட்டசபை தேர்தல்களில் பா.ஜனதா வெற்றி பெற்றதாக பொதுவான கருத்து இருக்கிறது. ஆனால் இது இந்தியா கூட்டணியின் செயல்பாட்டுடன் நோடியாக தொடர்புடையதாக நினைக்கவில்லை. ஏனெனில் அடிப்படையில் அந்த கூட்டணி மக்களவை தேர்தலுக்காக அமைக்கப்பட்டது.

மக்களவை தேர்தலுக்கு பிந்தைய கட்டத்தை எவ்வாறு முன்னெடுப்பது என்பது குறித்து எந்த விவாதமோ அல்லது சிந்தனையோ வைக்கப்படவில்லை என்று நினைக்கிறேன். மதசார்பற்ற எதிர்க்கட்சிகளின் பரந்த தளம் அல்லது ஒற்றுமை தேவை. அதேநேரம் இந்தியா கூட்டணி குறிப்பிட்ட மாநில தேர்தல்களுக்கானது அல்ல.எனவே, வரும் நாட்களில் பரந்த எதிர்க்கட்சி ஒற்றுமை அல்லது தளத்துடன் எவ்வாறு முன்னேற முடியும் என்பதை அனைத்து தரப்பினரும் பார்த்து, விவாதித்து, அதற்கு ஒரு வடிவம் கொடுக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.

தமிழ்நாடு மற்றும் பீகாரில் ஏற்கனவே இந்த கூட்டணி இருக்கிறது. அதேநேரம் மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரசும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டும் இணைந்து செயல்படும் என எதிர்பார்க்க முடியாது. அதைப்போல டெல்லியில் காங்கிரசும், ஆம் ஆத்மியும் இணைந்து செயல்பட முடியாது.அப்படி இந்தியா கூட்டணியில் உள்ள பல கட்சிகள் சட்டசபை தேர்தல்களில் இணைந்து செயல்பட முடியாது. எனவே, எதிர்க்கட்சி ஒற்றுமை மேடையை தேர்தல் களத்துடன் மட்டும் இணைக்கக்கூடாது. மோடி அரசையும், பா.ஜனதாவையும் ஒன்றிணைந்து எதிர்க்கும் களமாக பரவலாக்க வேண்டும். இவ்வாறு பிரகாஷ் காரத் கூறினார்.

Read Entire Article