
சென்னை,
சைபர் குற்றங்கள் குறைய வேண்டும் என்றால், மக்கள் அது தொடர்பாக அதிக விழிப்புணர்வு பெற வேண்டும் என்று முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு கூறியுள்ளார்.
சென்னை பெசன்ட் நகரில், காவல் துறை சார்பில் சைபர் குற்றங்கள் தொடர்பான விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மாணவ, மாணவிகள் கலந்து கொண்ட இந்த பேரணியை முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் கூறியதாவது;-
"சைபர் குற்றங்கள் ஏன் தொடர்ந்து நடைபெறுகிறது என்றால், பொது மக்களுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு இல்லை. பெரிய அளவில் வருமானம் வந்துவிடும் என்று நினைத்து ஏமாந்து விடுகிறார்கள். மக்கள் அதிக விழிப்புணர்வு பெற வேண்டும்.
சைபர் குற்றங்கள் குறைய வேண்டுமெனில் சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். சைபர் மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். இந்த குற்றவாளிகளை தேசிய பாதுகாப்பு சட்டம் அல்லது குண்டர் சட்டத்தின் கீழ் ஓராண்டு காலம் சிறையில் அடைக்கும் அதிகாரத்தை காவல்துறைக்கு வழங்க வேண்டும்."
இவ்வாறு சைலேந்திர பாபு தெரிவித்தார்.