
திருச்செந்தூர்,
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் குரு தலமாகவும், சிறந்த பரிகார தலமாகவும், ஆன்மிக சுற்றுலா தலமாகவும் விளங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில், வார விடுமுறை தினம் மற்றும் சுபமுகூர்த்த நாளான இன்று தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய மாவட்டங்கள் மட்டுமல்லாது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இதையொட்டி கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்பட்டது. 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், 10 மணிக்கு உச்சி கால அபிஷேகமும், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடந்தது.
காலையில் இருந்தே கடல் மற்றும் நாழிக்கிணறு புனித தீர்த்தத்தில் பக்தர்கள் நீராடி நீண்ட வரிசையில் சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். சுப முகூர்த்தம் நாள் என்பதால் கோவில் வளாகத்தில் ஏராளமான திருமணங்கள் நடந்தது. மேலும் அவ்வப்போது பெய்த சாரல் மழையில் நனைந்தவாறு பக்தர்கள் கடலில் புனித நீராடினர்.
இந்த நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் காரைக்குடியைச் சேர்ந்த ஓம்குமார் என்ற ஜவுளி வியாபாரி மூச்சுத்திணறி உயிரிழந்துள்ளார். சாமி தரிசனம் செய்ய நீண்ட வரிசையில் காத்துக்கொண்டிருந்தபோது ஓம்குமார் மயங்கி விழுந்தார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ஓம்குமாரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.