
டமாஸ்கஸ்,
சிரியாவில் 10 ஆண்டுகளுக்குமேல் உள்நாட்டுப்போர் நடைபெற்றது. தற்போது அந்நாட்டில் பஷிர் அல் அசாத் தலைமையிலான ஆட்சி அகற்றப்பட்டது. புதிய அதிபராக ஹயத் தஹிர் அல் ஷியாம் பதவியேற்றார்.
அதேவேளை, உள்நாட்டு போரின்போது பயன்படுத்தப்பட்ட பல வெடிகுண்டுகள் வெடிக்காமல் பூமிக்குள் புதைந்து உள்ளன. கடந்த டிசம்பரில் பஷிர் அல் அசாத் தலைமையிலான ஆட்சி கவிழ்ந்தபின் சிரியாவின் பல்வேறு பகுதிகளில் வெடிக்காமல் புதைந்து இருந்த சுமார் 1,500 வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு செயலிழக்கப்பட்டன.
இந்நிலையில், சிரியாவின் லடாகியா நகரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைதளத்தில் பழைய பொருட்களை சேமித்து வைக்கும் அறை உள்ளது.
அந்த அறையில் உள்நாட்டு போரின்போது பயன்படுத்தப்பட்ட வெடிகுண்டு, வெடிமருந்துகள் இருந்துள்ளது. இந்த வெடிமருந்து நேற்று இரவு திடீரென வெடித்து சிதறியது. இதில், அடுக்குமாடி குடியிருப்பும் இடிந்தது. இதனால், அடுக்குமாடி குடியிருப்பின் மேல் தளத்தில் வசித்து வந்த பலர் வெடிவிபத்தால் ஏற்பட்ட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் 16 பேர் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.