
புதுடெல்லி,
கடந்த 22-ம் தேதி நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத இலக்குகளை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதைத்தொடர்ந்து எல்லையில் இரு நாட்டுப் படைகள் நேரடி மோதலில் ஈடுபட்டதால் போர் பதற்றம் நிலவியது.
இதனைத்தொடர்ந்து இரு நாட்டு ராணுவ தளபதிகள் இடையிலான பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டிய நிலையில் நேற்று முன்தினம் மாலை 5 மணி முதல் தாக்குதல்கள் நிறுத்தப்பட்டன. இதனால், இரு நாட்டு எல்லையோரத்தில் அமைதி திரும்பியது. இந்நிலையில், இந்தியா, பாகிஸ்தான் ராணுவத் தலைமை இயக்குநர்கள் இடையே இன்று பேச்சுவார்த்தையும் நடைபெற்று முடிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் ஆபரேஷன் சிந்தூர் துவங்கி முடிந்துள்ள நிலையில், முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களிடம் உரையாற்றினார்.
அப்போது அவர் கூறுகையில், "ராணுவ வீரர்களுக்கு வீர வணக்கம். நமது பலத்தை கடந்த சில நாட்களாக காட்டி வருகிறோம். ராணுவ வீரர்கள், விஞ்ஞானிகள், உளவுத்துறை ஆகியோருக்கு நன்றி. ஆபரேஷன் சிந்தூர் இந்திய மகள்களிடம் சமர்ப்பணிக்கிறேன். இப்படி ஒரு தாக்குதல் நடக்கும் என தீவிரவாதிகள் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள். இவ்வளவு பெரிய முடிவுகளை இந்தியா எடுக்கும் என தீவிரவாதிகள் எதிர்பார்க்கவில்லை. நமது பெண்களின் குங்குமத்தின் அழித்ததற்காக தீவிரவாத முகாம்களின் தலைமையகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கையை மே 7 ஆம் தேதி ஒட்டுமொத்த உலகமே கண்டது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத முகாம்களை தாக்கினோம். தீவிரவாதத்தை எதிர்க்க முப்படைகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டது.
தீவிரவாதிகளை ஒடுக்குவதற்கு பதில், பாகிஸ்தான், இந்தியாவை தாக்கியது. பாகிஸ்தான் நமது எல்லைகளை தாக்கியது. நாம் பாகிஸ்தான் இதயத்தை தாக்கினோம். இந்தியா மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் பாகிஸ்தான் உலக நாடுகள் முன் அம்பலமாகிவிட்டது.
பாகிஸ்தானில் தீவிரவாதிகள் சுதந்திரமாக நடமாடி வருகிறார்கள். இந்தியாவின் சாமான்ய மக்களின் இடங்களை பாகிஸ்தான் ராணுவம் தாக்கியது. ஆனால், நாம் பாகிஸ்தானுக்குள் சென்றே பதிலடி கொடுத்துள்ளோம். அணு ஆயுதத்தை கொண்டு தாக்குவோம் என்ற பூச்சாண்டியை எப்போதும் ஏற்றுக்கொள்ளவே மாட்டோம்.
அணு ஆயுத சோதனைக்கு எல்லாம் பயப்பட மாட்டோம். நாட்டு மக்களை காப்பதற்காக எந்த எல்லைக்கும் செல்ல தயார். இந்தியாவின் எதிர் தாக்குதலை எதிர்கொள்ள முடியாமல் பாகிஸ்தான் அமைதியை தேடியது. பாகிஸ்தான் அதிகாரிகள்தான் இந்திய அதிகாரிகளை தொடர்பு கொண்டு சண்டை நிறுத்தம் கேட்டனர். போர் நிறுத்தம் தற்காலிகம் தான். பாகிஸ்தானை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எங்களது சேனைகள் எப்போதும் தாக்குதலுக்கு தயாராக உள்ளன. தீவிரவாதத்தை வேரோடு அழிக்க தயாராக இருக்கிறோம்" என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
இந்நிலையில் இந்திய ராணுவம் குறித்து முழு நாடும் பெருமை கொள்வதாக பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில், பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் கொள்கையை உலகம் முழுவதும் மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் வைத்துள்ளது. அவரது உரை இந்தியாவின் உணர்வின் வெளிப்பாடு மட்டுமல்ல, நமது நாட்டின் ராணுவ, ராஜதந்திர மற்றும் தார்மீக வலிமையின் விளக்கக்காட்சியும் கூட.
எதிர்காலத்தில் பாகிஸ்தானுடன் ஏதேனும் பேச்சுவார்த்தைகள் நடந்தால், அது பயங்கரவாதம் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் குறித்து மட்டுமே இருக்கும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தி உள்ளார். சிந்தூர் நடவடிக்கையின் போது இந்தியப் படைகளின் வீரத்தையும் துணிச்சலையும் அவர் வெளிப்படையாகப் பாராட்டினார். இந்திய ராணுவம் குறித்து முழு நாடும் பெருமை கொள்கிறது. பிரதமரின் வலுவான தலைமைக்கு நான் நன்றி கூறுகிறேன்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.