
புதுடெல்லி,
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் பகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள், சுற்றுலப்பயணிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தினர். இதில் 26 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா நடத்திய தாக்குதலில் பெரும் சேதம் ஏற்பட்டது.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதலை நடத்தியது. அதற்கு இந்திய படைகள் பதிலடி கொடுத்தது. இந்த ராணுவ நடவடிக்கையை தாக்குப்பிடிக்க முடியாத பாகிஸ்தான் இருதரப்பு மோதல் தொடர்பாக பல்வேறு பொய் தகவல்களை கட்டவிழ்த்து விட்டது. அந்த நாட்டு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் தொடர்ந்து பொய் தகவல்கள் பரவின.
அந்தவகையில் பாகிஸ்தானின் நானாசாகிப் குருத்வாராவை இந்தியா டிரோன் மூலம் தாக்கியதாக பொய் தகவல் ஒன்றை வெளியிட்டது. சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் பிறந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த குருத்வாரா, சீக்கியர்களின் புனித யாத்திரை மையமாக இருந்து வருகிறது.புகழ்பெற்ற அந்த குருத்வாரா தாக்கப்பட்டதை அறிந்தால் இந்தியாவில் மத மோதல் ஏற்படும் என்ற தீய எண்ணத்தில் பாகிஸ்தான் இந்த சதியில் ஈடுபட்டது.ஆனால் பாகிஸ்தானின் இந்த குற்றச்சாட்டை பி.டி.ஐ. செய்தி நிறுவனத்தின் உண்மை கண்டறியும் பிரிவு ஆய்வு செய்து, மேற்படி குற்றச்சாட்டு பொய் என கண்டறிந்து உள்ளது.
இதற்கிடையே ஜம்முவின் உதம்பூரில் உள்ள இந்திய விமானப்படை தளத்தை பாகிஸ்தான் தகர்த்ததாக அந்த நாட்டு டி.வி.யில் செய்தி வெளியிடப்பட்டது. ஆனால் இந்த தளம் தொடர்ந்து செயல்பட்டு வருவதாக மேற்படி உண்மை கண்டறியும் பிரிவு கண்டுபிடித்து அறிவித்தது.
மேலும் இந்திய விமானப்படை விமானத்தில் இருந்து விமானி ஒருவர் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தவறுதலாக இறங்கியதாகவும், பெண் விமானப்படை விமானி ஒருவர் பாகிஸ்தானில் சிறைபிடிக்கப்பட்டதாகவும் பாகிஸ்தான் சமூக ஊடகங்களில் பதிவுகள் வைரலாகின.மேலும் இந்தியாவின் மின்தொகுப்பை சைபர் தாக்குதல் மூலம் அழித்ததாகவும், மும்பை-டெல்லி விமான வழித்தடம் தற்காலிகமாக மூடப்பட்டு இருப்பதாகவும் பாகிஸ்தானில் பொய் பிரசாரங்கள் கட்டுக்கடங்காமல் பரவி வருகின்றன.
ஆனால் இவை அனைத்தும் பாகிஸ்தான் மேற்கொண்ட விஷமப்பிரசாரம் என்பது ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.இதற்கிடையே வெளிநாட்டு ஊடகங்களும் இந்த தாக்குதல் தொடர்பாக உண்மைக்கு மாறான தகவல்களை வெளியிட்டது தெரியவந்துள்ளது. அந்தவகையில் ஸ்ரீநகர் விமான நிலையத்தை சுற்றி சுமார் 10 இடங்களில் நேற்று முன்தினம் குண்டுவெடிப்பு நடந்ததாக சில வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
இதைப்போல ஜெய்ப்பூர் விமான நிலையத்துக்கு அருகிலும் தாக்குதல் நடந்ததாக அவை கூறியிருந்தன. எனினும் இந்த தகவல்கள் எதுவும் உண்மை இல்லை என அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.இவ்வாறு இந்தியாவுக்கு எதிரான பொய்ப்பிரசாரத்தை பாகிஸ்தான் பரப்பியது தற்போது அம்பலமாகி இருக்கிறது.