இந்திய மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்: 2024-25ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி காணப்பட்டதாக மாணவர் சேர்க்கைக் குழு தகவல்

2 weeks ago 1

சென்னை: நீட் கட்-ஆப் அதிகரிப்பால் இந்திய மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2024-25ம் கல்வியாண்டில் அரசு கல்லூரிகளில் சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புகளில் மொத்தம் 321 இடங்கள் இருந்தன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு 49 இடங்கள் போக மீதமுள்ள 272 இடங்கள் மாநில அரசுக்கு ஒதுக்கப்பட்டன. இதேபோல், தனியார் கல்லூரிகளில் 1341 அரசு ஒதுக்கீட்டு இடங்கள், 569 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் இருந்தன.

இந்த இடங்களுக்கான கலந்தாய்வு நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நடந்து முடிந்து இருக்கிறது. அரசு கல்லூரிகளில் சித்தா, யுனானி, ஆயுர்வேதா, ஓமியோபதி என அனைத்து படிப்புகளில் ஒரு இடங்கள் கூட காலியாக இல்லை. அனைத்து இடங்களும் நிரம்பிவிட்டன.  தனியார் கல்லூரிகளை பொறுத்தவரையில், யுனானி படிப்புக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை. அதுதவிர, சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி படிப்புகளுக்கான காலி இடங்களுக்கு நடந்த கலந்தாய்வில் சித்தா படிப்பில் அனைத்து இடங்களும் நிரம்பிய நிலையில், ஆயுர்வேதாவில் 5 இடங்களும், ஓமியோபதியில் 19 இடங்களும் மட்டுமே காலியாக உள்ளன.

கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், 2024-25ம் ஆண்டு மாணவர் சேர்க்கை கடும் போட்டி காணப்பட்டதாக மாணவர் சேர்க்கைக் குழு அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டாலும், எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளுக்கு கட்-ஆப் மதிப்பெண் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து கொண்டே செல்வதால், அந்த தேர்வை ஒவ்வொரு ஆண்டும் எழுதி மருத்துவப் படிப்பு கனவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் சோர்வடைந்து வருவதாகவும், அவ்வாறு சோர்வடைந்த மாணவர்களுடன் படித்தவர்கள் பட்டப்படிப்பை முடிக்கும் சூழலை உணர்ந்திருப்பதால், இனியும் தாமதிக்க கூடாது என இந்திய மருத்துவம், ஓமியோபதி படிப்புகளில் சேர ஆர்வம் காட்டியதாக சொல்லப்படுகிறது.

உதாரணமாக கடந்த 2023-24ம் ஆண்டில் சித்தா படிப்பில் கட்-ஆப் மதிப்பெண் (நீட் தேர்வு மதிப்பெண்) 423 ஆக இருந்தது. ஆனால் 2024-25ம் ஆண்டில் சித்தா படிப்பில் சேர்ந்த முதல் மாணவருடைய கட்-ஆப் மதிப்பெண் 592 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலும் 500 கட்-ஆப் மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் பலர் இந்திய மருத்துவம், ஓமியோபதி படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.

The post இந்திய மருத்துவ படிப்புகளில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம்: 2024-25ம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு கடும் போட்டி காணப்பட்டதாக மாணவர் சேர்க்கைக் குழு தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article