மும்பை,
இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வரும் 22-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் துணை கேப்டன் பதவி ஹர்திக் பாண்ட்யாவிடமிருந்து பறிக்கப்பட்டு அக்சர் படேலுக்கு வழங்கப்பட்டுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் ஹர்திக் பாண்ட்யா துணை கேப்டன்ஷிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டது ஏன்? என்று ரசிகர் ஒருவர் இந்திய முன்னாள் வீரரான தினேஷ் கார்த்திக்கிடம் கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக் கூறுகையில், "உண்மையாக எனக்கு தெரியவில்லை. ஹர்திக் பாண்ட்யா ஏன் துணை கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்று எனக்குத் தெரியவில்லை. அதற்கான காரணம் எதுவும் இருப்பதாகவும் எனக்குத் தெரியவில்லை. ஏனெனில் அவரது தலைமையில் இந்திய அணி நன்றாக விளையாடியது. அவர் துணைக் கேப்டனாக இருந்த இருதரப்பு தொடர்களிலும் இந்தியா வென்றுள்ளது. எனவே ஏன் பாண்ட்யா நீக்கப்பட்டார் என்பதற்கான அறிகுறி கூட எனக்குத் தெரியவில்லை" என்று கூறினார்.