மும்பை,
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (பி.சி.சி.ஐ.) செயலாளராக இருந்த ஜெய்ஷா சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) புதிய தலைவராக கடந்த டிசம்பர் மாதம் பொறுப்பேற்றார். இதனால் இந்திய கிரிக்கெட் வாரியத்திற்கு புதிய செயலாளரை நியமிக்க வேண்டியிருந்தது கிரிக்கெட் வாரிய விதிப்படி இந்த பதவியை 45 நாட்களுக்குள் நிரப்ப வேண்டும்.
இதனிடையே இந்திய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால செயலாளராக தேவஜித் சைகியா நியமிக்கப்பட்டார். சைகியா இதற்கு முன்னர் இணை செயலாளர் பதவியில் இருந்தார்.
இதனையடுத்து நிரந்தர செயலாளரை தேர்ந்தெடுக்கும் பணியில் பி.சி.சி.ஐ. நிர்வாகக்குழு இறங்கியது. மேலும் பொருளாளர் பதவியும் காலியாக இருந்தது.
இந்த பதவிகளுக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்திருந்ததால் அவர்கள் போட்டியின்றி தேர்வானார்கள். அதன்படி செயலாளராக தேவஜித் சைகியாவும், பொருளாளராக பிரப்தேஜ் சிங் பாட்டியாவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். இதனை இந்திய கிரிக்கெட் வாரிய தலைவர் ரோஜர் பின்னி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.