இந்திய அணிக்கு முகமது ஷமி எப்போது திரும்புவார் ? ரோகித் சர்மா பதில்

1 month ago 8

பெங்களூரு,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பெங்களூருவில் உள்ள சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று (புதன்கிழமை) தொடங்குகிறது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் இரு அணிக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் பெறுகிறது

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியையொட்டி இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார் . அப்போது அவரிடம், காயத்தால் 50 ஓவர் உலகக் கோப்பைக்கு பிறகு எந்த போட்டியிலும் ஆடாத வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடுவதற்கு வாய்ப்புள்ளதா? என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த ரோகித் சர்மா, 'உண்மையை சொல்ல வேண்டும் என்றால் தற்போதைய நியூசிலாந்து தொடர் அல்லது அடுத்து வரும் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்குள் அவர் உடல்தகுதியை எட்டிவிடுவார் என்று சொல்வது மிகவும் கடினம். சமீபத்தில் அவருக்கு கால்முட்டியில் வீக்கம் ஏற்பட்டது அசாதாரணமான ஒன்று. ஏறக்குறைய 100 சதவீதம் உடல்தகுதியை நெருங்கிய நிலையில் கால்முட்டியில் ஏற்பட்டுள்ள இந்த வீக்கம் அவருக்கு சற்று பின்னடைவு தான்.

தற்போது அவர் பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் உடல்தகுதியை மீட்டெடுக்க பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். அவர் 100 சதவீதம் உடல்தகுதியுடன் அணிக்கு திரும்ப வேண்டும் என்று விரும்புகிறோம். அவர் முழுமையாக குணமடைவதற்கு போதுமான காலஅவகாசம் வழங்க வேண்டியது முக்கியம். நியூசிலாந்து டெஸ்ட் தொடர் முடிந்ததும் அவரது உடல்தகுதி எப்படி இருக்கிறது என்பதை பார்ப்போம்' என்றார்.

Read Entire Article