இந்தி குறித்து பவன் கல்யாண் பேச்சு - கனிமொழி எம்.பி. பதிலடி

3 hours ago 3

தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் லாப நோக்கத்துக்காக தமிழ் படங்களை இந்தியில் டப்பிங் செய்வதை மட்டும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள், ஏன் அனுமதிக்கிறார்கள்? என்று ஜனசேனா கட்சியின் தலைவரும், ஆந்திர துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுதொடர்பாக நேற்று தனது ஜனசேனா கட்சியின் 12-வது ஆண்டு விழாவில் பேசிய அவர், "தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் திரைப்படங்களை பணத்துக்காக இந்தியில் டப்பிங் செய்ய கூறிவிட்டு இந்தியை எதிர்ப்பது ஏன்? பாலிவுட்டில் இருந்து பணத்தை விரும்பும் அவர்கள் இந்தியை மட்டும் ஏன் ஏற்க மறுக்கின்றனர்?" என்று பேசியிருந்தார்.

இந்நிலையில், பவன் கல்யாணின் பேச்சுக்கு தி.மு.க. எம்.பி. கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். இது தொடர்பாக தனது 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில், "மொழி தடைகளைத் தாண்டி திரைப்படங்களைப் பார்க்க தொழில்நுட்பம் நம்மை அனுமதிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

மேலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைப்பதற்கு முன் பவன் கல்யாண் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவை கனிமொழி எம்.பி. பகிர்ந்துள்ளார். அதில், "வட இந்திய அரசியல் தலைமை இந்தியாவின் கலாசார பன்முகத்தன்மையை புரிந்து கொண்டு மதிப்பளிக்க வேண்டும்" என்று பவன் கல்யாண் கூறியிருக்கிறார். இதையும், பவன் கல்யாணின் தற்போதைய பேச்சையும் குறிப்பிட்டு, 'பா.ஜ.க.வுக்கு முன், பா.ஜ.க.வுக்கு பின்' என்று கனிமொழி எம்.பி. பதிவிட்டுள்ளார்.

Technology allows us to watch movies beyond language barriers. https://t.co/mT03mJARqM pic.twitter.com/w3qRgcSsCY

— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) March 15, 2025
Read Entire Article