
கராச்சி,
இந்திய அணியின் இளம் அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன அபிஷேக் சர்மா, ஐ.பி.எல். தொடரில் சிறப்பாக விளையாடியதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அறிமுகம் ஆன முதலே அதிரடியாக விளையாடி வரும் அவர், சமீபத்தில் முடிவடைந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சதமடித்து அசத்தினார். இதனால் இந்திய டி20 அணியில் நிலையான தொடக்க ஆட்டக்காரர் இடத்தை இவர் பிடிப்பார் என்று முன்னாள் வீரர்கள் பலர் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெற உள்ள இந்தியா - பாகிஸ்தான் ஆட்டத்தை காண துபாய் சென்றுள்ள அபிஷேக் சர்மாவை பாகிஸ்தான் முன்னாள் ஜாம்பவான் வீரர் சோயப் அக்தர் எதிர்பாரா விதமாக நேரில் சந்தித்துள்ளார்.
அந்த சந்திப்பில் நல்லவேளையாக இந்தத் தலைமுறையில் தாம் பிறக்கவில்லை என்று அக்தர் கலகலப்பாக கூறியுள்ளார். இல்லையேல் அபிஷேக் சர்மா தம்மையே அடித்திருப்பார் என்று பாராட்டிய அவர் சில ஆலோசனைகளையும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இந்த தலைமுறையில் நான் பிறக்காததற்கு மகிழ்ச்சியடைகிறேன். இந்த இளம் பையனை மக்கள் விரும்புவதற்கு காரணம் இருக்கிறது. இங்கிலாந்துக்கு எதிராக அவர் சதம் அடித்தார். நான் உங்களுடைய ஆட்டத்தை பார்த்தேன். அது அற்புதமாக இருந்தது. உங்களுக்கு இங்கே நான் சில ஆலோசனைகளை கொடுக்கிறேன். உங்களுடைய பலத்தை எப்போதும் விடாதீர்கள். அதே நேரத்தில், உங்களை விட சிறந்தவர்களிடம் நண்பராகுங்கள். இந்த இளமையான திறமையான பையனுக்கு சிறந்த வாழ்வு இருக்கிறது. அவருக்கு நான் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று கூறினார்.