
சிம்லா,
இமாசலபிரதேச மாநிலம் மண்டி மாவட்டத்தில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.7 ஆக பதிவானது. மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டது. நிலநடுக்கத்தால் அந்த பகுதியில் உள்ள கட்டிடங்கள் குலுங்கின. இதனால் வீடுகளில் இருந்த பொதுமக்கள் அவசர அவசரமாக வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.
எனினும் உயிர் சேதம் அல்லது பொருட்சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுந்தர்நகர் பகுதியில் உள்ள கியார்கி அருகே 7 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மண்டி மாவட்டம் நில அதிர்வு மண்டலம் 5-ன் கீழ் வருகிறது. இது அதிக சேத அபாய மண்டலமாகும். முன்னதாக கடந்த 17-ம் தேதி டெல்லி, பீகாரைத் தொடர்ந்து ஒடிசாவிலும் நிலநடுக்கம் உணரப்பட்டது குறிப்பிடத்தக்கது.