
நீலகிரி,
நீலகிரி மாவட்டம் கூடலூரில் இருந்து ஊட்டி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் டி.ஆர்.பஜார் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்குமார். இவரது மனைவி ஷாலினி. இவர்களுக்கு நிதிஷ் (வயது 5). பிரனிதா (3) ஆகிய குழந்தைகள் உள்ளனர். சதீஷ்குமார், ஷாலினி அதே பகுதியில் விவசாயம் செய்து வருகின்றனர். இன்று காலை 10 மணி அளவில் தோட்டத்தில் குழந்தைகளுடன் ஷாலினி வேலை செய்து கொண்டிருந்தார். குழந்தைகள் ரெண்டு பேரும் விளையாடிக் கொண்டிருந்தனர். சதீஷ்குமார் ரேஷன் கடைக்கு சென்று விட்டார்.
இந்த நிலையில் விவசாய நிலத்தில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தைகளை காணாமல் அவரது தாய் ஷாலினி அப்பகுதியில் தேடினார். அப்போது விவசாய நிலத்தில் உள்ள சுமார் 5 அடி ஆழ கிணற்றில் நிதிஷ், பிரனிதா ஆகியோர் நீரில் மூழ்கிய படி பரிதாபமாக உயிரிழந்து கிடப்பதை கண்டு கதறி அழுதார்.
தகவல் அறிந்த உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கண்ணீர் விட்டு அழுதனர். இதைத்தொடர்ந்து நடுவட்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் துரைராஜ் உள்ளிட்ட போலீசார் விரைந்து வந்து குழந்தைகளின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கூடலூர் அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். இந்த சம்பவம் நடுவட்டம் சுற்றுவட்டார பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.