
சென்னை,
மத்திய அரசு ஒருங்கிணைந்த கல்வித்திட்டத்தில் (சமக்ர சிக்ஷா அபியான்) தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய ரூ.2 ஆயிரத்து 152 கோடி நிதியை ஒதுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது. இந்த நிதியை உடனடியாக வழங்க வேண்டும் என்று மத்திய அரசை, தமிழக அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
ஆனால் தேசிய கல்வி கொள்கையின்படி மும்மொழி கொள்கையை அமல்படுத்தாவிட்டால் தமிழ்நாட்டுக்கு இந்த நிதியை ஒதுக்க முடியாது என்று மத்திய கல்வித்துறை மந்திரி தர்மேந்திர பிரதான் கூறினார். மத்திய மந்திரியின் இந்த பேச்சை கண்டித்து இந்திய மாணவர் சங்கம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை உள்பட தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும் அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த நிலையில், இந்த விவகாரம் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறப்பட்டிருப்பதாவது:-
உங்களுக்கு இந்தி தெரியும்.. நீங்க இந்தியில் பேசுறீங்க.. எங்களையும் இந்தியில் பேச சொல்லி கட்டாய படுத்துகிறீங்க. ஏன்னா உங்களுக்கு இந்தி மட்டும் தான் தெரியும்.. இந்த அபத்தமான விளையாட்டு எங்களிடம் செல்லாது.. #GetOutModi #justasking. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.