
அகமதாபாத்,
ஐ.பி.எல். தொடரில் அகமதாபாத்தில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 243 ரன்கள் குவித்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 97 ரன்கள் எடுத்தார்.
தொடர்ந்து 244 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த குஜராத் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டை இழந்து 232 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 11 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் திரில் வெற்றி பெற்றது. குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் சுதர்சன் 74 ரன்கள் எடுத்தார். இந்த போட்டியில் ஆட்டநாயகன் விருது ஸ்ரேயாஸ் ஐயருக்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பின்னர் பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, இந்த சீசனின் முதல் ஆட்டத்திலேயே 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருப்பது மிகவும் சிறப்பான ஒன்று. நான் எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஒரு பவுண்டரி அடித்தேன். அது எனக்கு ரன்களைச் சேர்க்க உதவியது. ஷசாங்க் 16-17 பந்துகளில் எடுத்த 44 ரன்கள் அணிக்கு மிகவும் முக்கியமானவை. நாங்கள் அதற்கு ஒரு அளவுகோலை அமைத்தோம்.
பனியின் தாக்கம் இருக்கும் சமயத்தில் நிலைமைகள் மாறக்கூடும். ஆனால் அதிர்ஷ்டவசமாக வைஷாக் விஜயகுமார் சிறப்பாக செயலப்ட்டார். அதேசமயம் அர்ஷ்தீப் சிங்கும் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தியதுடன் சாய் சுதர்ஷனின் விக்கெட்டையும் கைப்பற்றி எங்களுக்கு ஒரு வழியை உருவாக்கி கொடுத்தார்.
மைதானத்தில் எங்களால் என்ன செய்ய முடியும் என்பதில் அணி வீரர்கள் அனைவரும் உறுதியுடன் இருந்தனர். இதே உத்வேகத்தை மற்ற போட்டிகளுக்கும் முன்னெடுத்துச் செல்ல நாங்கள் விரும்புகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.