
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மழை காரணமாக இந்த ஆட்டம் 14 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு 14 ஓவரில் 9 விக்கெட்டை இழந்து 95 ரன்கள் மட்டுமே எடுத்தது.
பெங்களூரு தரப்பில் டிம் டேவிட் 50 ரன் எடுத்தார். பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங், மார்கோ ஜான்சென், சாஹல், ஹர்ப்ரீத் ப்ரார் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். தொடர்ந்து 96 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய பஞ்சாப் 12.1 ஓவரில் 5 விக்கெட்டை மட்டும் இழந்து 98 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக நேஹல் வதேரா 33 ரன் எடுத்தார். இந்த போட்டியின் ஆட்டநாயகன் விருது டிம் டேவிட்டுக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில், இந்த ஆட்டத்தில் தோல்வி கண்ட பின்னர் பெங்களூரு வீரர் ஹேசில்வுட் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது,
இது வழக்கமான சின்னசாமி ஆடுகளம் போல் இல்லை. ஆடுகளத்தில் எப்போதும் வழக்கமான பவுன்ஸ் இருக்கும். ஆனால், இப்போது கடந்த காலங்களில் இருப்பது போல சீராக இல்லை. 6 முதல் 8 மீட்டர் நீளத்தில் பந்து வீசினாலே அது பேட்ஸ்மேன்களுக்கு மிகவும் சிரமமாக மாறிவிடுகிறது. இந்த சீசனில் நாங்கள் அதனை நன்றாக உணர்ந்திருக்கிறோம்.
நாங்கள் இங்கு தோற்ற முதல் இரண்டு ஆட்டங்களை உன்னிப்பாக கவனித்து பார்த்தால் எதிரணி பேட்ஸ்மேன் ஒருவர் சிறப்பாக விளையாடி பார்ட்னர்ஷிப் அமைத்து இன்னிங்ஸில் தாமதமாக அதிக ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெற வைத்துள்ளார்.
எனவே, எங்கள் அணியின் முதல் ஐந்து அல்லது ஆறு வீரர்களில் ஒருவர் 20 ஓவர்கள் வரை பேட்டிங் செய்தால் சொந்த மண்ணில் எங்கள் அணி வெற்றி பெறுவதற்கு சிறப்பாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.