
சென்னை,
ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகும் அவரது 25-வது படத்திற்கு 'கிங்ஸ்டன்' என்று தலைப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த படத்தை ஜி.வி. பிரகாஷின் பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் மற்றும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து உள்ளன. கிங்ஸ்டன் படத்தை இயக்குனர் கமல் பிரகாஷ் எழுதி, இயக்கியுள்ளார். இது ஜி.வி. பிரகாஷ் தயாரிக்கும் முதல் படம்.
இந்த படத்தில் நடிகை திவ்யபாரதி, ஜி.வி.பிரகாஷுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார். பேச்சுலர் படத்திற்கு பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்து உள்ளனர். இந்த படத்தில் சேத்தன், அழகம் பெருமாள், இளங்கோ குமரவேல் என பலர் நடித்திருக்கிறார்கள். இப்படம் மார்ச் 7-ம் தேதி வெளியாக உள்ளது.
இந்த நிலையில், சமீபத்திய நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் ஜி.வி. பிரகாஷ் இப்படம் குறித்து சுவாரஸ்யமான தகவலை பகிர்ந்துள்ளார். அதாவது, "இது நாம் வழக்கமாக பார்க்கிற சினிமா மாதிரி இல்லை. ஒரு பெரிய சினிமாடிக் அனுபவத்தை உங்களுக்கு கொடுக்க உள்ளது. "ஹாரிபாட்டர், பைரேட்ஸ் ஆப் தி கரீபியன்ஸ்" போன்ற ஹாலிவுட் படம் மாதிரி இந்த படம் உருவாகியுள்ளது. குறைந்த பட்ஜெட்டில் ஒரு புது உலகத்தை உருவாக்கி இருக்கிறோம். இது மாதிரியான படம் இதுவரை இந்திய சினிமாவில் வந்ததில்லை" என்ற கூறியுள்ளார்.
