'இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல' - 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைப்பு

7 hours ago 1

சென்னை,

36 வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகியுள்ள படம் 'தக் லைப்'. இப்படத்தில் நடிகர் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய காதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருக்கும் இப்படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ரெட் ஜெயன்ட் மூவிஸ் இணைந்து தயாரித்துள்ளது. இப்படம் வருகிற ஜூன் 5-ந் தேதி திரைக்கு வருகிறது. இதையடுத்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 16-ந் தேதி நடைபெறும் என கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுவதால் 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழா தள்ளிவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

நம் நாட்டின் எல்லையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையும், தற்போதையை எச்சரிக்கை நிலையை கருத்தில் கொண்டும் வரும் 16ம் தேதி திட்டமிடப்பட்டிருந்த 'தக் லைப்' படத்தின் இசை வெளியீட்டு விழாவை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம்.

நமது தாய்நாட்டைப் பாதுகாப்பதில் நமது வீரர்கள் தளராத துணிச்சலுடன் முன்னணியில் நிற்கும் நிலையில், இது கொண்டாட்டத்திற்கான நேரம் அல்ல, அமைதியான ஒற்றுமைக்கான நேரம் என்று நான் நம்புகிறேன். புதிய தேதி பின்னர், மிகவும் பொருத்தமான நேரத்தில் அறிவிக்கப்படும்.

இந்த நேரத்தில், நமது நாட்டைப் பாதுகாக்க விழிப்புடன் நிற்கும் நமது ஆயுதப் படைகளின் துணிச்சலான ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றி எங்கள் எண்ணங்கள் உள்ளன. குடிமக்களாக, நிதானத்துடனும் ஒற்றுமையுடனும் பதிலளிப்பது நமது கடமை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Read Entire Article